Published : 29 Jul 2021 03:12 AM
Last Updated : 29 Jul 2021 03:12 AM
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக நேற்று நடத்திய முதல்கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், திமுக அரசின் மெத்தனப்போக்கை களையவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு கண்டனம் தெரிவித்தும், ஜூலை 28-ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில் தங்கள் வீடுகளின் முன் அதிமுக தொண்டர்கள் பதாகைகளை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். இதை ஏற்று, நேற்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தங்கள் வீடுகளின் முன் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்
போடியில் எம்எல்ஏ அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:திமுக பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. திமுக முன்னணி தலைவர்கள், பேச்சாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இதைக் கூறி மக்களை நம்பவைத்தனர். இதையடுத்து அதிமுகவை விட 3 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு கடந்த 3 மாதங்களில் மக்களின் முக்கிய பிரச்சினைகளில் இருந்து திமுக பின் வாங்குகிறது. நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் நிதி உதவி என எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை.
கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அதிமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டது என பிரதமரே முன்பு பாராட்டியிருந்தார். ஆனால் தற்போது திமுக தலைமையிலான அரசில் கரோனாவால் நிகழும் மரணங்கள் மறைக்கப்படுகின்றன. முல்லை பெரியாறு பாசன விவசாயிகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்ந்தால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
ஜனநாயக முறைப்படி அதிமுக வழிநடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் தனிப்பட்ட குடும்பமோ, தனிநபரோ ஆதிக்கம் செலுத்த முடியாது. யாராலும் அதிமுகவை கைப்பற்றவும் முடியாது. தொண்டர்கள் பலம் தன்னிடம் உள்ளது என்று சசிகலா கூறுவது கற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்களை திசை திருப்ப முயற்சி
சேலத்தில் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமியின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பழனிசாமி, பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்றார். ரத்து செய்யவில்லை. கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000,பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
‘நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என இதுவரை குரல் கொடுத்து வந்த திமுக அமைச்சர்கள் தற்போது, ‘மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள்’ என்கிறார்கள். குறைந்த நேரத்தில் எவ்வாறு மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக முடியும்? வேண்டுமென்றே திட்டமிட்டு நீட் தேர்வுரத்து செய்யப்படும் என அறிவித்துபெற்றோர்களை ஏமாற்றி திமுகதேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.
எந்த அடிப்படையில் மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றேதெரியவில்லை. மின் கணக்கீடு பெரும் குளறுபடியாக உள்ளது.அடிக்கடி மின் நிறுத்தம் ஏற்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர்.
திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதை மறந்து திமுகவினர் பேசுகின்றனர். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு சட்ட பேரவையில் அறிவித்தது. ஏற்கெனவே சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதை நாங்கள் கொண்டு வந்தோம். திமுக அரசு இதை செயல்படுத்தினால் விடிவுகாலம் பிறக்கும் என்றார்.
இதேபோன்று, முன்னாள்அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழகநிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் என பலரும் தங்கள் பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT