Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

தமிழகத்துக்கு சொன்னதைவிட மத்திய அரசு - கூடுதல் தடுப்பூசி வழங்கியதை மறைத்து அரசியல் செய்கிறது திமுக : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

திருவண்ணாமலை

தமிழகத்துக்கு சொன்னதை விட கூடுதலாக மத்திய அரசு தடுப்பூசி வழங்கியதை மறைத்து அரசியல் செய்வதாக திமுக மீது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ் மண்ணை சார்ந்ததுதான் பாஜக சித்தாந்தம். ஆன்மிகத்தை அடிப்படையாக வைத்து கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. பவுர்ணமி, கார்த்திகை தீபத்துக்கு யாருமே அழைக்காமல் பல லட்சம் பேர் வருகிறார்கள். தமிழக மக்களுக்கு ஆன்மிக தேடுதல் இருக்கிறது. ஆன்மிகத்துடன் வாழ்க்கை பயணத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக கோயிலை புண்ணிய ஸ்தலமாக தமிழக மக்கள் பார்க்கின்றனர். கிரிவலம் செல்ல முடியவில்லை என எனக்கும் வருத்தமாக உள்ளது.

கரோனா தடுப்பூசி விஷயத்தில் மத்திய அரசை கண்டிக்கிறோம் என்பதில் முகாந்திரம் கிடையாது. தமிழகத்துக்கு கடந்த ஜூன் மாதத்துக்கு 41 லட்சம் தடுப்பூசி கொடுக்க வேண்டும். ஆனால், 52 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. கூடுதலாக 11 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 70 லட்சத்துக்கும் கூடுதலாக தான் தடுப்பூசியை மத்திய அரசு வழங்கும்.

டோக்கன் பெறுவதாக புகார்

தடுப்பூசி மையங்களில் திமுகவினர் சென்று, டோக்கனை பெற்று தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு வழங்குகின்றனர். இதைக் கண்டித்துதான் அதிமுக, பாஜக ஆர்ப்பாட்டம் செய்துள்ளன. ஜூன் மாதத்துக்கு சொன்னதை விட, குறைவாக கொடுத்துள்ளனர் எனசுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை வெளியிடட்டும்.

மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கிறது, நிறைய தடுப்பூசி வழங்குகிறது என புதுடெல்லியில் பேசுகிறார்கள், சென்னை வந்ததும் மாற்றி பேசுகின்றனர். தமிழகத்துக்கு பாரபட்சம் பார்க்கின்றனர் என கூறுகின்றனர். சொன்னதை விட மத்திய அரசு அதிகமான தடுப்பூசி வழங்கும்போது, அதனை மறைத்து ஏன் அரசியல் செய்கின்றனர்.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை மத்திய அரசு செய்து வருகிறது. ஒரு லிட்டருக்கு 5ரூபாய் குறைப்போம் என சொல்லிதிமுக ஆட்சிக்கு வந்தது. அவர்கள்சொன்னதுபோல் குறைக்கவில்லை. பழைய அரசு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக புதிய அரசு சோதனை நடத்துவது என்பது, தமிழகத்தில் வாடிக்கையாக இருப்பதுதான். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம், அவர்கள் அரசியலுக்காக சோதனை நடத்தினார்களா என்பது தெரிந்துவிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர், திருவண்ணாமலையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x