Published : 16 Jul 2021 03:11 AM
Last Updated : 16 Jul 2021 03:11 AM

மேகேதாட்டுவில் அணைக் கட்டும் முயற்சியை கண்டித்து - தஞ்சாவூரில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் :

மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர்.

தஞ்சாவூர்

மேகேதாட்டுவில் அணைக் கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்துக்கு சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியது: மேகேதாட்டுவில் அணை கட்டினால், தமிழகத்தில் 5 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். தமிழகமக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உருவாகும். எனவே, அணை கட்டமுயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, உடனடியாக குடியரசுத்தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும், தமிழக அரசு இனிமேல் பிரதமர் மோடியையும், நீர்வளத் துறை அமைச்சரையும் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, குடியரசுத் தலைவர் மூலமாக அரசியல் ரீதியான அழுத்தத்தை பிரதமருக்கு கொடுக்க வேண்டும்.

குறுவை பயிரைக் காப்பாற்ற, சம்பா சாகுபடியைத் தொடங்க உரியதண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும். அணைகளின் நீர் நிர்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் ஆணையம் செயல்பட வேண்டும் என்றார்.

இப்போராட்டத்தில் தமிழகம்முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாய சங்கங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x