Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM
முதல்வர் எப்போது அறிவிக்கிறாரோ அப்போது பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட மைய நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம், கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து, 3-வது நாளாக கரூர் மாவட்டத்திலும் அனைத்து நிலை பள்ளிகள், மைய நூலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நூலகங்களில் வாசகர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன. இன்னும் என்ன வசதிகள் வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
பள்ளிகளில் மாணவிகள் பாதுகாப்பாக கல்வி கற்பதற்கான சூழல் உள்ளதா? கழிப்பறைகள் ஒழுங்கான முறையில் உள்ளனவா? என்பது குறித்தும் வகுப்பறைகள், இருக்கைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் விவரம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று படிப்படியாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கரோனா ஊரடங்கால், கடந்தாண்டு தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்கவும், அதில் முதல் தவணையாக 30 சதவீதம், 2-வது தவணையாக 45 சதவீதம் செலுத்தவும் நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது. நிகழாண்டும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும்.
பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டனை வழங்கப்படும்.குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உண்மைத்தன்மை அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அது குற்ற வழக்காக உள்ள பட்சத்தில் காவல்துறை மூலம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் அதுகுறித்து முடிவு தெரியவரும். நீட் தேர்வு தொடர்பாகவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் வழங்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் கொடுக்கப்பட்டு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என முதல்வர் அறிவிக்கிறாரோ, அப்போது பள்ளிகளைத் திறக்க தயாராக உள்ளோம் என்றார்.
ஆய்வின்போது, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT