Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

நடிகை சாந்தினி அளித்த புகார் மீதான வழக்கில் - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு : ராமநாதபுரத்தில் தனிப்படை போலீஸார் விசாரணை

மணிகண்டன்

சென்னை / ராமநாதபுரம்

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக சினிமா துணை துணை நடிகை அளித்த புகார் மீதான வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவர் மீது துணை நடிகை சாந்தினி என்பவர் கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அடையார் அனைத்து மகளிர் போலீஸார், மணிகண்டன் மீதுபாலியல் வன்முறை, கருக்கலைப்பு, தாக்கி காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், கொலைமிரட்டல் விடுத்தல் போன்ற பல்வேறு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் போலீஸார் மணிகண்டனை தேடி வரும் நிலையில், தற்போது மணிகண்டன் தனக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

புகார்தாரர் தனக்கு எதிராக இந்த குற்றச்சாட்டை ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மிரட்டி பணம் பறிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சுமத்தியுள்ளார். தனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. நான் ஏற்கெனவே திருமணமானவன் என்பது தெரிந்தே, புகார்தாரர் தனது முழு சம்மதத்துடன்தான் தன்னுடன் பழகி வந்தார். புகார்தாரரை ஒருபோதும் கருக்கலைப்பு செய்ய மிரட்டவில்லை. அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டார்.

மலேசியாவில் இதுபோல பிரபலமான பலரை மிரட்டி பணம்பறித்துள்ளதாக அவர் மீது புகார்கள் உள்ளன. சினிமா வாய்ப்பு இல்லாததாலும், பெற்றோரின் மருத்துவ சிகிச்சைக்காகவும் புகார்தாரர் தன்னிடம் உதவி கேட்டதால் பரணி என்பவர் மூலமாக ரூ.5 லட்சம் கொடுத்தேன். அதை திருப்பிக் கேட்டதால் தற்போது அவர் தான் தன்னை மிரட்டி வருகிறார். தனக்கு எதிரான புகாரில் போலீஸார் ஆரம்பகட்ட விசாரணை கூடநடத்தாமல் அவசரகதியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவேஎனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதற்கிடையே, நடிகை சாந்தினிஅளித்துள்ள புகாரில் மணிகண்டன் ராமநாதபுரம், ராமேசுவரம், டெல்லிஉள்ளிட்ட நகரங்களுக்கு தன்னையும் அழைத்துச் சென்று தங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தனிப்படையினர் ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிகளில் அவர்கள் தங்கியிருந்ததற்கான முக்கிய ஆதாரங்களை சேகரித்து சென்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரித்தால் மட்டுமே விசாரணை அடுத்தகட்டத்துக்கு நகரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x