Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM
கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் 152 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்டகரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) டவுன்ஷிப்பில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட நிர்வாகம், டிஎன்பிஎல் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் 200 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுஉள்ளது. அவற்றில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை.
இந்த சிகிச்சை மையத்துக்குதேவையான மின்சாரம், குடிநீர்வசதிகள், மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடுஇல்லாமல் இந்த மருத்துவமனைக்கு கிடைக்கும் வகையில்,ரூ.1 கோடியில் தேவையான உபகரணங்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், அருகில் உள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டரில் இங்கு நிரப்பி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இந்த கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலியில் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்பி ஜோதிமணி, டிஎன்பிஎல் செயல் இயக்குநர் எஸ்விஆர்.கிருஷ்ணன், எஸ்பி சசாங்சாய், எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், ஆர்.இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோரும், தலைமைச் செயலகத்தில் இருந்துதலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஎன்பிஎல் நிறுவன தலைவர்ராஜீவ் ரஞ்சன், தொழில் துறை சிறப்புச் செயலர் அருண்ராய் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இம்மையத்தில், கரூர் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பரிந்துரைப்படி மட்டுமே கரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நேரடியாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். உயர் சிகிச்சை தேவைப்படும் நிலையில் உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு 4 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT