Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM
பிரசித்தி பெற்ற உதகை மலர்க் காட்சி கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மக்கள் நேரடியாக காண முடியாததால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இணைய வழியில் (வெர்ச்சுவல்) காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இணைய வழி மற்றும் சமூக ஊடகங்களில் மலர்க் காட்சியை வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் காட்சி, அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக் கண்காட்சி, கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி, சுற்றுலாத் துறையின் சார்பில் உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டி மற்றும் படகு அலங்காரப் போட்டி என பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா காரணமாக மலர்க் காட்சி நடத்த முடியாத நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்ந்துள்ள லட்சக்கணக்கான மலர்களை இணையதளம் வழியாக பொதுமக்கள் காண, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கலைத் துறை ஏற்பாடு செய்துள்ளன. ‘Botanical Garden 2021’ என்ற இணையவழியில் மலர்க் காட்சியை வனத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நேற்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: இந்த ஆண்டு மலர்க் காட்சி நடைபெறும் என்ற எண்ணத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தோட்டக் கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குளிர்ப்பிரதேச மற்றும் மித வெப்ப அலங்கார செடிகளை உள்ளடக்கிய 52 பேரினங்கள் வகையைச் சேர்ந்த 293 ரகங்களை கொண்ட 25 ஆயிரம் மலர்த் தொட்டிகள் மற்றும் 5 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்கள் மற்றும் மலர் ஆர்வலர்களை கவரும் வண்ணம் புது ரகங்களான கேலாலில்லி, லைமோனியம், கொடிஷியா, டொரினியா ஜெர்பரா போன்ற மலர்ச்செடிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, மலர்த் தொட்டிகளில் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருந்த மலர்க்காட்சி கரோனா பெருந்தொற்றால் நடத்தப்படவில்லை. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவிட்-19 தடுப்பூசி போடுங்கள் என்றவாசகம் மலர்த் தொட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ், கூடலூர் எம்எல்ஏ பொன் ஜெயசீலன், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநர் ஷிப்ளாமேரி, உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT