Published : 16 May 2021 03:15 AM
Last Updated : 16 May 2021 03:15 AM

விழுப்புரம் அருகே ஒரு தரப்பினரை - காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த பஞ்சாயத்து : வீடியோ வைரலானதால் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், வெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் 3 பேர் காலில் விழுவதுபோல புகைப்படங்களும், வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், இதுதொடர்பாக முழுமையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஏடிஎஸ்பிதேவநாதன், திருவெண்ணை நல்லூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமதாஸ் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது. அவர்தெரிவித்த விவரம்: கடந்த 12-ம் தேதி ஒட்டநந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கோயில் திருவிழா நடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீஸார் அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி திருவிழாவை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதால் திருவிழா நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அன்று மாலை அப்பகுதி இளைஞர்கள் வேனில் இருந்தபடி பாடும் இசை குழுவினரை வரவழைத்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். போலீஸார் அங்கு சென்று இசை குழுவினரின் இசை கருவிகளை கைப்பற்றினர்.

மறுநாள், ‘திருவிழாவுக்காக செய்த செலவு வீணாகிவிட்டது. ‘ஏன் இப்படி நடந்தது?’ என ஒருதரப்பினர் பேசியுள்ளனர். போலீஸாருக்கு தகவல் கொடுத்த நபரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஊரில் அனைவரும் கூடிப் பேசினர். அப்போது, திருவிழா நடத்தப்பட்டது தொடர்பாக விவாதிக்கும்போது ‘செய்தது தவறுதான்’ என ஒரு தரப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் வாயால் சொன்னால் போதாது எனக் கூறியுள்ளார். இதையடுத்து அந்த தரப்பில் இருந்து 3 பேர் காலில் விழுந்து, ‘இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது. நாம் ஒற்றுமையாக இருப்போம்’ எனக் கூறியதால் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் 14-ம் தேதி இதுகுறித்த வீடியோ வைரலானது.இதையடுத்து இருதரப்பினரும்தனித்தனியே திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இப்புகாரின்பேரில் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

இந்த நிகழ்வின்போது யார் யாரெல்லாம் இருந்தார்களோ அவர்களை அடையாளங் கண்டு அவர்களை ‘செக்யூர்’ செய்ய உத்தரவிட்டுள்ளேன். தொடர்புடையோர் விரைவில் கைது செய்யப்படுவர். மற்றபடி அங்கு வேறு ஏதும் பிரச்சினை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

2 பேர் கைது

இதற்கிடையே ஒட்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த முருகன், லோகநாதன், குமரன், ஆதிகேசவன் உள்ளிட்ட 54 பேர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராமசாமி மகன் குமரன் கொடுத்த புகாரின்பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், கோகுல்ராஜ், முத்துகுமரன், சீதாராமன், ராமசந்திரன், முத்துராமன், சூர்யா, அய்யப்பன் ஆகியோர் மீது வன்கொடுமை சட்டம் உட்பட 6 பிரிவின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோகுல்ராஜ், சீதாராமன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் ஆட்சியர் அண்ணாதுரை ஒட்டனந்தல் கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது எஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே ஒரு தரப்பைச் சேர்ந்த அக்கிராம பெண்கள், பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x