Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கரோனா நோயாளிகள் உயிரிழக்கும் நிலையில் மதுரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்குத் தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் தினமும், 400 முதல் 600 பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டும் 929 கரோனா நோயாளிகள் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
வடமாநிலங்களில் போதிய ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு, உயிருக்குப் போராடும் துயரச் சம்பவங்கள் நடக்கும் நிலையில், மதுரை அரசு கரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடையின்றிக் கிடைக்கிறது.
தொலைநோக்குடன் மதுரை எம்பி. சு.வெங்கடேசன், அப்போதைய ஆட்சியர் டிஜி.வினய், கரோனா தடுப்பு அதிகாரி சந்திரமோகன், டீன் சங்குமணி ஆகியோரின் கூட்டு முயற்சியால் ஆக்சிஜன் கொள்கலன்களை அதிகப்படுத்தியதே இதற்குக் காரணமாகும்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது: மதுரையில் கரோனா சிகிச்சை மையமாகச் செயல்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 310 ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். 538 படுக்கைகள் காலியாக உள்ளன.
அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்காக அனைத்து ஸ்டெச்சர்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால், உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு வருவோருக்கு அடுத்த ஒரு நொடியில் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கரோனா நோயாளிகள் கழிப்பறைக்குள் சென்றபோதுதான் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் அங்கு இறப்பது அதிகரித்தது. அதைத் தடுக்க சூப்பர் ஸ்பெஷாலிட்டி கரோனா சிகிச்சை மைய கழிப்பறைகளில் ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கப்பட்டன. அது நோயாளிகளுக்கு மிகுந்த பயனாக உள்ளது என்று கூறினர்.
மதுரை எம்பி. சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு கரோனா காலத்தில் அதிகாரிகளுடன் கூட்டாக ஆய்வு செய்து மதுரை அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவைபல மடங்கு உயர்த்த திட்டமிட்டோம்.
ராஜாஜி மருத்துவமனையில் 6,000 லிட்டர் கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே நேரடியாக ஆக்சிஜன் கொடுக்கும் வசதியிருந்தது. நாங்கள் கூடுதலாக 700 படுக்கைகளுக்கு வசதி ஏற்படுத்தினோம். கொள்கலன் அளவும் 20 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்பட்டது.
கரோனா சிகிச்சைக்கு மற்றொரு பிரதான மையமாகச் செயல்பட்ட மதுரை தோப்பூர் காசநோய் மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் மட்டுமே இருந்தன. எந்த ஒரு படுக்கைக்கும் ஆக்சிஜன் வசதியில்லாத நிலையில் 110 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு வழங்கினோம். இதற்காக அங்கு 2 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டது. வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லாத அளவுக்கு முன்னுதாரணமாக மதுரை அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்புப் படுக்கைகள் அதிகமாக உள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT