Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
தென்மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக சங்கிலி தொடராக நடைபெற்றுவரும் சாதிய கொலைகளின் நீட்சியாகவே, பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் விசாரணை கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்ட சம்பவமும் பார்க்கப்படுகிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ கடந்த 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி விசாரிக்கிறது. துணை சிறை அலுவலர் சிவனு உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
முத்துமனோவின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை மத்திய சிறைமுன் கடந்த 23-ம் தேதி 8 மணி நேரத்துக்கு மேலாக மறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், சிறை உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வலியுறுத்தி முத்துமனோவின் உடலை வாங்கமறுத்து வாகைகுளம் கிராமத்தில் உறவினர்களும், அக்கிராமத்தினரும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கிறார்கள்.
ராமதாஸ் கேள்விகள்
முத்துமனோ மீது மூன்றடைப்பு, களக்காடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. களக்காட்டை சேர்ந்த இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடந்த 8-ம் தேதி முத்துமனோ உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அரிவாள், நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் விசாரணை கைதிகளை, கிளைச்சிறையில் 15 நாட்கள் வரை வைத்திருந்து, பின்னர், மத்திய சிறைக்கு மாற்றும் நடைமுறையை சிறைத்துறை கடைபிடிக்கிறது. அந்த வகையில்தான் முத்துமனோவும் வைகுண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் மத்திய சிறைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 7 பேர் கைதாகியுள்ளனர்.
மத்திய சிறையில் சாதி வன்மத்துடன் ஏராளமான கைதிகள் இருப்பது தெரிந்திருந்தும், போலீஸார் அஜாக்கிரதையாக இருந்ததும், ஏற்கெனவே நடைபெற்றகொலைகள், கொலை முயற்சிகளுக்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் அரங்கேறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிபதியின் பரிந்துரைகள்
தென்மாவட்டங்களில் சாதிகலவரங்களையும் உயிர்பலிகளையும் தடுக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தலைமையிலான கமிஷன் பல்வேறு பரிந்துரைகளை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்கு அளித்திருந்தது. ஆதிக்கம் செலுத்தும் சாதி சார்ந்த அதிகாரிகளை உள்ளூரில் பணியமர்த்த கூடாது. உள்ளூர் இளைஞர்கள் ஜாதி மோதல்களில் ஈடுபடாமல் இருக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அரசுத்தரப்பு கண்டுகொள்ளவில்லை. சாதி சார்ந்த சில அதிகாரிகள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிகிறார்கள். சங்கிலி தொடர்போன்ற கொலை சம்பவங்களுக்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.மேலும் சில முக்கியபுள்ளிகள், தங்கள் சாதியினருக்கு தாங்கள்தான் காவலன் என்ற பிம்பத்தை உருவாக்கி கொண்டு, கூலிப்படையினரை ஏவுவதும், பல்வேறு கொலைகளுக்கு பின்னணியாக இருப்பதும், உயர்காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கிறது. ஆனாலும், அந்த முக்கிய புள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது, சாதிய வன்மம் கனன்று கொண்டே இருக்க காரணமாகிறது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான அ.பிரம்மா கூறும்போது, “சிறை அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசு கடமை தவறியிருக்கிறது. காவல் நிலைய மரணத்துக்கு ஒப்பாக இந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இது அப்பட்டமான மனிதஉரிமை மீறல். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய மோதல்களின் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT