Last Updated : 24 Apr, 2021 03:14 AM

 

Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM

ஸ்டெர்லைட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாமா? - தூத்துக்குடி கருத்துக்கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு : எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் மோதல், கல்வீச்சால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே ஸ்டெர் லைட் ஆலை ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படங்கள்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளிப்பது தொடர்பாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள் ஸ்டெர்லைட் ஆலைவளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தினர்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் - ஆதரவாளர்கள் இடையே மோதல், கல்வீச்சும் நடைபெற்றது. இதில் ஒரு பெண் காயமடைந்தார்.

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாமல், நாடு முழுவதும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி கோரியும், உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க தயாராக இருப்பதாகவும் வேதாந்தாநிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கோரியது.

ஆலை அமைந்துள்ள தூத்துக்குடி பகுதி மக்களின் கருத்துகளை அறிவதற்காக, தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று அவசர கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 14 பேர், ஆதரவாளர்கள் 6 பேர் அழைக்கப்பட்டனர்.

காலை 7.30 மணிக்கே ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் குவிந்தது. பாரபட்சமின்றி அனைவரையும் அனுமதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, அமமுக உள்ளிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சுமார் 100 பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மேலும் சிலர் அனுமதிக்கப்பட்டனர்.

ஆட்சியர் விளக்கம்

60 பேர் பங்கேற்றதில் ஆதரவாளர்கள் 10-க்கும் குறைவே.ஆட்சியர் செந்தில்ராஜ் பேசும்போது, ``ஸ்டெர்லைட் ஆலையைதிறக்க அனுமதிப்பதில்லை என்றுதமிழக அரசு உறுதியாக உள்ளது.உச்ச நீதிமன்றத்தில் இதையே தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் ஆக்சிஜன் நிலையத்தை மட்டும்இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து அறியவே இக்கூட்டம் நடத்தப்படுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய பலரும், `ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் நிலையத்தை இயக்க அனுமதிக்கக் கூடாது. அதை பயன்படுத்தி குறுக்குவழியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அந்நிறுவனம் முயற்சி செய்யும். ஸ்டெர்லைட் ஆலையை எந்நிலையிலும் திறக்கக் கூடாது’ என வலியுறுத்தினர்.

`ஆக்சிஜன் நிலையத்தை தமிழகஅரசே ஏற்று நடத்தினால் அனுமதிக்கலாமா?’ என ஆட்சியர் கேட்டார். அதற்கும் அனுமதிக்கக் கூடாது என பலரும் கூறினர்.அப்போது ஒருவர் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக பேச முயற்சிக்க,மற்றவர்கள் கூச்சல் போட்டதுடன்,அவரைத் தாக்க முயன்றனர். அவர்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அதன் பின்பு, ஆதரவாளர்கள் யாருமே கூட்டத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.

அழிக்க வேண்டும்

நிறைவாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு மனுவை ஆட்சியரிடம் அளித்தனர். அதில், `ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலுமாக பிரித்து அழிக்க வேண்டும். அந்த நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அதைத் தொடர்ந்து தமிழக அரசேஆக்சிஜன் உற்பத்தி செய்வதில்ஆட்சேபனை இல்லை. ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்பட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`மக்களின் கருத்துகள் அரசுக்கு தெரிவிக்கப்படும்’ எனக் கூறி கூட்டத்தை ஆட்சியர் நிறைவு செய்தார். அதன் அடிப்படையில் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பான அறிக்கையை ஆட்சியர் உடனடியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.

மோதல், கல்வீச்சு

இதேவேளையில், ஸ்டெர்லைட்எதிர்ப்பாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே திரண்டு நின்றனர். ஆதரவாளர்கள் சிலர் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து எதிர்ப்பாளர்கள் ஆவேசமாக கத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டன. ஆதரவாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். கல்வீச்சில் ஆதரவாளர் தரப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வரும்போதும், ஆதரவாளர்களைப் பார்த்து, எதிர்ப்பாளர்கள் ஆவேசமாக கத்தினர். அப்போதும் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் அவர்களை கலைந்து போகச் செய்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில், எதிர்ப்பாளர்கள் பலர் பகல் 12 மணி வரை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால், வழக்கு விசாரணை திங்கள்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டதை அறிந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர். பகல் 12 மணிக்கு பிறகே ஆட்சியர் அலுவலக வளாகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x