Published : 24 Apr 2021 03:14 AM
Last Updated : 24 Apr 2021 03:14 AM
புதுச்சேரியில் மத்திய அரசின் ஜவகர்லால் நேரு மருத்துவ பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) செயல்பட்டு வருகிறது. தேசிய தரம் வாய்ந்த இந்த மருத்துவமனையில் புதுச்சேரிமட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர்வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
கடந்தாண்டு கரோனாவால் ஜிப்மரில் வெளிப்புற சிகிச்சைக்கு, தொலைபேசி மூலம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் இம்முறை நீக்கப்பட்டது. கரோனா 2-ம் அலைபரவலைத் தொடர்ந்து, கடந்தஏப்.9-ம் தேதி முதல் மீண்டும்தொலைபேசி மூலம் முன்பதிவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு துறைவாரியான தொலைபேசி எண்கள் ‘www.jipmer.edu.in’ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
‘ஹலோ ஜிப்மர்’ என்ற ஆண்ட்ராய்டு செயலி உதவியுடன் வெளிப்புற சிகிச்சைக்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இவ்வுதவி சரிவர கிடைக்காமல் நோயாளிகள் அவதி படுகின்றனர். ஜிப்மரில் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் கூறும்போது "முன்பதிவு செய்த நோயாளிகளுக்கு, பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் இருந்து மருத்துவர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிகிச்சை தேவைப்படுவோர் மட்டும் மருத்துவமனைக்கு வர அறிவுறுத்துவார். குறுஞ் செய்தியும் அனுப்பப்படும். நாள் ஒன்றுக்கு ஒவ்வொருதுறையிலும் 100 நோயாளிகள் மட்டுமே வர அனுமதிக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பில் உள்ளனர்.
இதய நோய், புற்றுநோய், எய்ட்ஸ், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 15 நாட்களுக்குஒருமுறை மட்டும் மருந்து வழங்கப்படுகிறது. அது தீர்ந்துவிட்டால் மீண்டும் மருந்து வாங்க தொலைபேசியில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு உடன் அனுமதி கிடைப்பதில்லை’’ என்கின்றனர்.
இந்நிலையில், கரோனாவை காரணம் காட்டி, வரும் திங்கள்கிழமை முதல் வெளிப்புற சிகிச்சையை முற்றிலுமாக நிறுத்த இருப்பதாக ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவசரசிகிச்சை, அவசர அறுவை மருத்துவம் தவிர இதர அனைத்து விதசிகிச்சைகளுக்கும் உள் அனுமதிநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிப்புற நோயாளிகள் வசதிக்காக தொலைபேசி கலந்தாலோசனை அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் வெளியிட்டுள்ள தகவலில், "தொற்று உள்ளவர்கள் மற்ற மருத்துவமனைகளின் பரிந்துரையால் எந்த முன்அறிவிப்பும் இன்றி, ஜிப்மர் கோவிட்பிரிவுக்கு வருகிறார்கள். பிராணவாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப விரும்பும் எந்த ஒரு மருத்துவமனையும் மருத்துவர்கள் மூலம் முன்கூட்டியே மின்னஞ்சல் (covidreferraljipmer@gmail.com) அல்லது தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும். படுக்கையை உறுதிப்படுத்திய பிறகே நோயாளிகளை ஜிப்மருக்கு அனுப்ப வேண்டும். நோயாளி, அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ளக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT