Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு - நெல்லிக்காய் மூட்டைபோல் அதிமுக சிதறிவிடும் : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து

திருவண்ணாமலை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல் அதிமுக சிதறிவிடும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடஇன்று பிற்பகல் 2 மணியளவில் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளேன். மாலையில் கோவில்பட்டியில் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன். அமமுகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எங்களது தேர்தல் அறிக்கையில், மக்களை ஏமாற்றும் திட்டங்களை அறிவிக்கவில்லை. நாங்கள், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுப்போம். அதன்மூலம் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு பெற, வளர்ச்சி அடைய நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம். அமமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

அதிகார துஷ்பிரயோகம்

அமைச்சர் கடம்பூர் ராஜு வாகனத்தை சோதனையிட்ட அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு, அதிகாரிஒருவர் இடமாற்றம் செய்யப்படுகிறார் என்றால், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதற்கு உதாரணமாக உள்ளது. அவர்கள் என்ன செய்தாலும், அமமுகவை கோவில்பட்டி மக்கள் வெற்றி பெற செய்வார்கள். திமுக சார்பில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்த திட்டங்களில் எத்தனைதிட்டங்களை நிறைவேற்றியுள்ள னர் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என தவிக்கின்றனர். அது தேர்தல் அறிக்கையிலும் தெரியவருகிறது.

அனைத்து துறைகளிலும் ஊழல்

அமமுக தொடங்கியதன் முதல் நோக்கமே, அதிமுகவை மீட்டெடுக்கத்தான். இப்போதும் அந்த பணியை தொடர்கிறோம். அதிமுகவில் உள்ளவர்களின் ஊழல் குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம். அவர்களது ஊழலை வரிசைப்படுத்த முடியாது. கரோனா காலக்கட்டத்தில்கூட முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அனைத்துத் துறைகளிலும் ஊழல். முதல்வர் பழனிசாமி பொறுப்பு வகிக்கும் நெடுஞ்சாலைத் துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.

ஆட்சி இருக்கும் வரைக்கும்தான் அதிமுக கட்சி இருக்கும். அதன்பிறகு நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிவிடும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனை வரும் எங்களுடன் இணைவார்கள். அதிமுகவை மீட்டெடுப்போம். தேர்தலுக்கு பிறகுஅரசியலுக்கு மீண்டும் வருவது குறித்து சசிகலாதான் முடிவெடுக்க வேண்டும்.

மாற்று சக்தியாக அமமுக

பண மூட்டையை நம்பிதான் ஆளுங்கட்சியினர் தேர்தலில் நிற்கின்றனர். அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது என மக்களுக்கும் தெரியும். பணத்தை மட்டும் நம்பி தேர்தலில் போட்டியிட்டால், என்ன நிலை ஏற்படும் என இந்த தேர்தல் முடிவின் மூலம் தெரியவரும். மாற்று சக்தியை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்று சக்தியாக அமமுக கூட்டணி இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x