Published : 01 Mar 2021 03:16 AM
Last Updated : 01 Mar 2021 03:16 AM

கல்வி, வேளாண்மை, சுகாதாரத்தை வணிக மயமாக்கிவிட்டனர் மத்திய அரசு மீது நெல்லை பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

“கல்வி, வேளாண்மை, சுகாதாரத்தை வணிக மயமாக்கி விட்டனர்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி பேசியதாவது:

புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்கவில்லை. கல்விக்கு தொடர்பில்லாதவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கல்வித்துறையில் மத்திய அரசிடம் அதிகாரங்கள் குவிந்திருப்பது கல்வியை சீரழித்துவிடும். எல்லா தரப்பினரின் கருத்துகளையும் கேட்பது மட்டுமே ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்க முடியும். ஆனால், மத்திய அரசு அவ்வாறு செய்யவில்லை.

நாட்டிலுள்ள அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உறுதி செய்வோம். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கல்வியை கொண்டு செல்ல வேண்டும் என்றுகருதுகிறேன். மத்திய பட்டியலில்கல்வி இருப்பது என்பது மோசமானது. இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் ஒன்றிணைந்தது.

ஆசிரியர்களே கல்வியின் மையமாக இருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரமும், ஊதியமும்அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சுதந்திரம் அளித்தால்தான் புதிய சிந்தனைகள், படைப்புகள் உருவாகும். அவர்களை அடக்கி ஆள நினைக்க கூடாது. பெண்களுக்கு அதிகாரமும், மதிப்பும் அளிக்காத சமுதாயம் முன்னேற முடியாது.

கல்வி, வேளாண்மை, சுகாதாரம் போன்றவற்றை வணிக மயமாக்கி விட்டார்கள். ஏழைகள், பணக்காரர்கள் என அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக்கு மத்திய பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும். கரோனா காலத்தில் ஒருசிலரின் லாபத்துக்காக மட்டும் மத்திய அரசு ரூ.1.5 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தது. அத்தொகையை கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கியிருக்கலாம்.

பெரிய அளவிலான கனவுடன் நாங்கள் செயல்படுகிறோம். அதில் 80 சதவீதம் அளவுக்காவது வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்ஆங்கிலேயர்களை இந்தியாவிலி ருந்து வெளியேற்றியதுபோல, மோடியை மீண்டும் நாக்பூருக்கு திருப்பி அனுப்ப வேண்டும். தமிழகம் யாருக்காக வெற்றிநடை போடுகிறது என்பது மக்களுக்கு தெரியும். 2 அல்லது 3 பேருக்காக மட்டுமே தமிழகம் வெற்றிநடைபோடுகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

நெல்லையப்பர் கோயிலில் தரிசனம்

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ராகுல்காந்தி சுவாமி தரிசனம் செய்தார். காந்திமதியம்மன் சந்நிதிக்குசென்ற அவருக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்தார். நெல்லையப்பர் கோயிலின் பாரம்பரியம், சிறப்புகள், கோயிலில் உள்ள சிற்பங்கள், இசைத்தூண்கள் குறித்துகேட்டறிந்தார். பின்னர் ரதவீதிகளில் காரில் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x