Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தமிழகத்தின் 15-வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்தார்.
தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு அமைந்த 15-வது சட்டப்பேரவையின் நிறைவு கூட்டத்தொடர் கடந்த 2-ம் தேதி ஆளுநர்பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. பிறகு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 5-ம் தேதி வரை நடந்தது. அத்துடன், அவை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதிமுடிவதால், புதிய பேரவையை அமைப்பதற்கான பொதுத் தேர்தல்ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி, வரும் 2021-22நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்தார். 25-ம் தேதி முதல் நேற்று வரை பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மறைந்த சித்த மருத்துவர் சிவராஜ் சிவகுமார் மற்றும் உத்தராகண்ட் பனிப்பாறை சரிவு, விருதுநகர் பட்டாசு விபத்து ஆகியவற்றில் உயிரிழந்தவர்களுக்கு பிப்.25-ம்தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.
பட்ஜெட் விவாதம் 26-ம்தேதி காலையும் நடந்தது. அன்றுமாலை நடந்த சிறப்பு கூட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதிலுரை அளித்தார். கூடுதல் செலவினங்களுக்கான துணை மதிப்பீடுகளை தாக்கல்செய்தார். இதையடுத்து, நிதி ஒதுக்கத்துக்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
15-வது சட்டப்பேரவையின் நிறைவு கூட்டம் என்பதால் முதல்வர்பழனிசாமி, பேரவைத் தலைவர் பி.தனபால் ஆகியோரும் உரையாற்றினர். பின்னர், பேரவையை ஒத்திவைப்பதற்கான தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்தார். வாக்கெடுப்பில் அந்த தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, மீண்டும் கூடுவதற்கான தேதி குறிப்பிடாமல் பேரவையை பேரவைத் தலைவர் பி.தனபால் ஒத்திவைத்தார்.
நினைவிடத்தில் மரியாதை
பேரவைக் கூட்டம் முடிந்த பிறகு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் மெரினாவுக்கு சென்று, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT