Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் (88) உடல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளமலைப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் (88) சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் காலமானார். இவருக்கு டேவிட் ஜவஹர் என்கிற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர்.
இவரது உடல் சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கீழவெள்ளமலைப்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்து பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அக்கட்சி எம்.பி.க்கள் சுப்பராயன், எம்.செல்வராஜ், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பி.சேதுராமன், மாவட்டச் செயலாளர்கள் சரவணன் (மாநகர்), காளிதாசன் (புறநகர்), முன்னாள் எம்எல்ஏக்கள் குணசேகரன், பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் எம்.பி., மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், க.கனகராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், தமுஎகச சார்பில் கருணாநிதி, கோடாங்கி சிவமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ பா.சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து பண்ணை வீட்டில் பெற்றோர் கல்லறைகளுக்கு அருகே பிற்பகல் 3 மணி அளவில் தா.பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT