Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
ஜெயலலிதாவின் பிறந்தநாளான நாளை மாலை 6 மணிக்கு அதிமுகவினர் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றிவைத்து, ‘‘ஜெயலலிதா வழியில் மக்களையும், அதிமுகவையும் காப்பேன்’’ என்றுஉறுதிமொழி ஏற்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜெயலலிதா பிறந்தநாள் 24-ம்தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கட்சியினருக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:
எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்து தந்த பாதையில் அதிமுக இன்றுவரை அடிபிறழாமல் பயணிக்கிறது. அதிமுகவை தாய்போல சீராட்டி, காவல் தெய்வமாக இருந்து காப்பாற்றி, ஈடு இணையில்லாத வீரியமும், உயிரோட்டமும் உள்ள இயக்கமாக நம் கைகளில் தந்துவிட்டு சென்றுள்ளார் ஜெயலலிதா.
அவரது உழைப்பு, தியாகத்தால் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்துக்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்குசெய்ய நினைப்போரை அறத்தின் வழிநின்று அழித்தும், ஒழித்தும் அதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா என்றென்றும் காக்கும்.
நமது விசுவாசம் என்பது ஜெயலலிதாவுக்கும், அவரது கண்ணுக்கு கண்ணாக இருந்த அதிமுகவுக்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவைக்கும் மக்களுக்கும்தான் சொந்தம். அதை விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ வாங்க முடியாது. இன்னும் 2 மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும், எதிரிகளும், துரோகிகளும் கைகோர்த்து, எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கி உள்ளனர். நம் உழைப்பு, உத்வேகம், ஒற்றுமை உணர்வு, மக்கள் மீதுள்ள நேசம், திசை மாறா விசுவாசத்தால் இவர்களை எல்லாம் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.
இந்த குறிக்கோளோடு கட்சியினர் அனைவரும், ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.24-ம் தேதி ‘என் இல்லம் அம்மாவின் இல்லம்’ என்று உளமார நினைத்துக் கொண்டு, வீடுகளில் மாலை 6 மணிக்குதீபம் ஒன்றை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கிப் பார்த்து, நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து,‘‘உயிர்மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்கத்தையும் காப்பேன். இது அம்மா மீது ஆணை’’ என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று, வரும் நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயரப் பறக்கச் செய்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT