Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பரப்புரை நிகழ்ச்சிஈரோடு பங்களாபுதூரில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு நாடு முழுவதும் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தும், மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியால்தான் இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பெட்ரோலுக்கு மத்திய அரசு ரூ.10.39 வரியாக விதித்தது. தற்போது ரூ.32.98 என வரி உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு வரி ரூ.11.90-ல் இருந்து ரூ.19.90 ஆக உயர்ந்துள்ளது. டீசலுக்கான மத்திய அரசு வரி ரூ.4.50-ல் இருந்து இன்று ரூ.31.83ஆகவும், மாநில அரசு வரி ரூ.6.61-ல்இருந்து ரூ.11.28 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத மனப்பான்மையை பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெளிப்படுத்துகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் விலைவாசி உயரும். ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். எனவே, மத்திய, மாநிலஅரசுகள் வரிகளைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது வரிகளைக் குறைக்கச் சொன்ன பாஜக, தற்போது ஆளுங்கட்சி ஆனபின்பு வரிகளை உயர்த்தியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு திமுகஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பெட்ரோல் மீது போடப்பட்ட 30 சதவீத வரியை, 27 சதவீதமாக குறைத்தார். ஆனால்,2017-ல் இந்த வரியை 34 சதவீதமாக பழனிசாமி உயர்த்தினார்.
திமுக ஆட்சியில் 2006-ம் ஆண்டுடீசல் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து, 23.40 சதவீதமாகவும், 2008-ம் ஆண்டு அதையே 21.40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போதைய முதல்வர் இதனை 2017-ல் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளார். அசாம் மாநில பாஜக அரசு வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைத்துள்ளது. அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவும் இதுபோன்று வரியை குறைக்க வேண்டியதுதானே என்றார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு ஈரோட்டில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT