Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் தலைவாசல் புதிய வருவாய் வட்டம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், கால்நடை பராமரிப்புத் துறை அரசு செயலர் கோபால் வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறைஅமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
விழாவில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்ஆராய்ச்சி நிலைய கட்டிடங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட தலைவாசல் வருவாய் வட்டத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.
மேலும் தலைவாசல், தேனி, உடுமலை ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையையும் முதல்வர் தொடங்கிவைத்து பேசியதாவது: கால்நடை வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி சுமார் ரூ.1,023 கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிதாக 1,002 ஏக்கரில் உருவாக்கப்படும் என ஓராண்டுக்கு முன்னர் நான் அறிவித்தேன். நானே அடிக்கல் நாட்டினேன். இப்போது நானே திறந்து வைத்துள்ளேன்.
நான் வெளிநாடு சென்றபோது, அங்கு நாளொன்றுக்கு 65 லிட்டர் பால் கொடுக்கும் பசுக்களை கண்டேன். நம் ஊரிலும் அதுபோல ஏன் உருவாக்கக் கூடாது என்று சிந்தித்தேன். ஆராய்ச்சி நிலையம் மூலம் 40 லிட்டர் பால் தரக்கூடிய கலப்பின பசுக்களை உருவாக்கினால், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்.
கலப்பின பசு ஆராய்ச்சி மையம்
எனவே, சேலம் மாவட்டம் கருமந்துறையில் ரூ.100 கோடியில் கலப்பின பசுக்களை உருவாக்கும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். உதகையில் அமைக்கப்பட இருந்த கால்நடை ஆராய்ச்சி மையம் நீதிமன்ற வழக்கு காரணமாக தடைபட்டு, இப்போது மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்காக, அழகிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஆராய்ச்சிப் பூங்காவுக்காக, ரூ.260 கோடியில் காவிரிகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திட தொடர்ந்து பாடுபடுவேன் என்றார்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஓராண்டில் 360 கால்நடை மருத்துவர்கள் உருவாகின்றனர். பெருகிவரும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கால்நடை மருத்துவர்கள் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்து, மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்துள்ளார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT