Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப் படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பூரில் நேற்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைநிறைவேற்றக் கோரி போராடியவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக் குப் பரிசுகள், கேடயங்கள் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது: ஒரு வீட்டில் நான்கு குழந்தைகள் இருந்தால், அதில் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு பாசம் அதிகம் இருக்கும். அதை அடிப்படையாகக் கொண்டுதான், 100 நாட்களில் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கம் இல்லாதவர் முதல்வர் பழனிசாமி. என் மீது பழி சுமத்தும் முன், அவர் எந்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்பதைக் கூற வேண்டும். ஒரு மாநிலத்தில் ஆட்சிதொடங்கும்போதுதான், திட்டங்களை தொடங்கிவைக்க வேண்டும். ஆனால், தற்போது ஆட்சி முடியும் நேரத்தில் கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார் முதல்வர்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்தபோது, ‘விஷன் 2023' திட்டத்தை அறிவித்தார். தனிநபர் வருமான உயர்வு, ரூ.15 லட்சம் கோடிக்கு உட்கட்டமைப்புத் திட்டங்கள், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, இரு மருத்துவ நகரங்கள், கோவை-மதுரை, கோவை-சேலம் தொழில் காரிடர் என அதில் பல அறிவிப்புகள் இருந்தன. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இவை எதுவுமே நிறைவேற்றப் படவில்லை.
2015-ல் முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியபோது, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.2.42 லட்சம்கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 4 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல, முதல்வர் பழனிசாமி ஆட்சியில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அதில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். அடுத்து, வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று, 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், 35,520 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். ஆனால், எந்த முதலீடும் வரவில்லை, வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை.
கரோனா காலத்தில் 101 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.88 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும், ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார் முதல்வர். ஆனால், அதுவும் தோல்விதான்.
தற்போது புதிய தொழில் கொள்கையை வெளியிட்டு, ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கப்போவதாகவும், 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், முதலீடுகளை ஈர்க்கும் சரணாலயமாக தமிழகம் மாறும் என்றும் கூறியுள்ளார். உண்மையில், ஊழல்களின் சரணாலயமாகத்தான் தமிழகத்தை மாற்றியுள்ளனர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய மாவட்டமாக இருந்த திருப்பூர், தற்போது தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் நிலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். அதேபோல, அத்திக்கடவு-அவிநாசிதிட்டம் முழுமையாக செயல் படுத்தப்பட்டு, அதிக பலன் தரும் திட்டமாக நிறைவேற்றப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT