Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போட விரைவில் அனுமதி கிடைக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று 2-ம் கட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வெகு விரைவில் கிடைத்து விடும் என எதிர்பார்ப்பதாக தமிழக மக்கள்நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவர் கரோனா வைரஸ் 2-வது தவணை கோவாக்சின் தடுப்பூசியை நேற்று போட்டுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்தாலும், பொதுமக்கள் பொது இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

தமிழகத்தில் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர் என முன்களப் பணியாளர்கள் 3.59 லட்சம் பேர்இதுவரை கரோனா வைரஸ்தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான அனுமதியை எதிர்நோக்கியுள்ளோம். அதற்கான அனுமதி வெகு விரைவில் கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறோம்.

ஒருபுறம் வைரஸ் பரவல் குறைந்து வரும் சூழலில் மறுபுறம் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டால் எதிர்காலத்தில் வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியும்.

முழுமையாக கட்டுப்படுத்தலாம்

வளர்ந்த நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. அங்கு தடுப்பூசியும் போடுகின்றனர். நம் நாட்டில் வைரஸ் தாக்குதல் குறைவாக உள்ள நிலையிலேயே தடுப்பூசியும் போடுவதால், அதை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மிக கவனத்துடன் நோயாளிகளை கையாளுவதால், இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x