Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.குமரகுரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி மொழிப்போர் தியாகிகள் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்வில் முதல்வர்பேசியது: திமுக தலைவர் ஸ்டாலின், புகார் பெட்டி வைத்து மக்களிடம் மனு வாங்கப் போவதாக கூறியுள்ளார். இதற்கு அவசியமில்லை. மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என்று பேரவையில் அறிவித்தேன். அதன் மூலம் தமிழகம் முழுவதும் 9 லட்சத்து 77 ஆயிரத்து 658 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5 லட்சத்து 22 ஆயிரத்து 812 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் நிராகரிக்கப்பட்ட மனுக்களுக்கான காரணமும் கூறப்பட்டது.
‘கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஊர் ஊராக திண்ணை அமைத்து மக்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தி மக்களிடம் பெறப்பட்ட மனு என்ன ஆனது?’ என ஸ்டாலின் மக்களிடையே கேள்வி எழுப்புகிறார். வாங்கிய மனுக்களை அரசிடம் கொடுத்திருந்தால் அதற்கு தீர்வு கண்டிருக்க முடியும். ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாறவும் தயாராக இல்லை.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியது போல் தற்போது ஏமாற்றலாம் என நினைத்தால் அது நடக்காது. எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என துடிக்கிறார். அது நடக்காது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT