Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

தொடர் மழையால் தாமிரபரணியில் 7-வது நாளாக வெள்ளப்பெருக்கு தண்ணீரில் தத்தளிக்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் தாமிரபரணி ஆற்றில் இருகரைகள், மண்டபத்தை மூழ்கடித்தவாறு பெருக்கெடுத்து பாயும் வெள்ளம். (அடுத்த படம்) கோபாலசமுத்திரம் அருகே கருங்காடு பகுதியில் வயல்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் மூழ்கிய வாழைகள். படங்கள்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/தூத்துக்குடி

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிக்கும் நிலையில், தாமிரபரணியில் 7-வதுநாளாக நேற்றும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வான குடியிருப்புகள் மற்றும் நெல், வாழை பயிரிட்டுள்ள விளைநிலங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், இரு அணைகளுக்கு வரும் தண்ணீர் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 11,060கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 8,981 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வடக்குபச்சையாறு, நம்பியாறு அணைகளும் நிரம்பிவிட்டதால் இவற்றுக்கு வரும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சேர்வலாறு, கொடுமுடியாறு அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.

அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் நேற்று7-வது நாளாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நெல், வாழை பயிரிட்டுள்ள விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாநகரில் பலஇடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை நீரை வெளியேற்றக் கோரி 4 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா நதி அணை, ராம நதி அணை,கருப்பா நதி அணை, குண்டாறு அணை ஆகிய 4 அணைகள் நிரம்பின. இந்த அணைகளுக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x