Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM
ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து என்னுடன் நேரடியாக விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா என முதல்வர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி பேசியதாவது: முதல்வரும், அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டதாக பொய்யான புகாரை ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்துள்ளார். எங்களது அரசில் எல்லாப் பணிகளும் இ-டெண்டர் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த ஊழல் பணத்தில் ரூ.200 கோடி கலைஞர் டிவிக்கு கைமாறியது. இதுபற்றி ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. இந்த வழக்குகளில் இனி வாய்தா வாங்க வழியில்லை என்பதால், ஏப்ரல் மாதத்துக்குள் அவர்கள் தண்டனை பெற்று விடுவார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் ஊழல் பற்றிப் பேச அருகதையில்லாதவர். அதிமுக அமைச்சர்கள் சிறையில் களி தின்பார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். எங்கள் மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிக்க எந்த இடத்துக்கு ஸ்டாலின் அழைத்தாலும் நான் வருகிறேன். இந்த சவாலை ஏற்க ஸ்டாலின் தயாரா? எதில், என்ன ஊழல் என்று கேட்டால், நான் பகிரங்கமாக பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்.
அதிமுக உடையும் என்று ஸ்டாலின் கூறுகிறார். முதலில் அவர் தனது கட்சியை காப்பாற்றிகொள்ளட்டும். என் தந்தையை சரியாக கவனிக்கவில்லை. என் அப்பா உயிர் வாழ வேண்டியவர், வாழவில்லை என்று அழகிரி குற்றம்சாட்டுகிறார். இதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
திமுக குடும்பக் கட்சி. அங்கு வாரிசுகள் மட்டும் தான் பதவிக்கு வர முடியும். ஆனால், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT