Published : 29 Dec 2020 03:14 AM
Last Updated : 29 Dec 2020 03:14 AM

அமைச்சர்கள் ஊழல் பட்டியல் விரைவில் வெளியாகும் மநீம தலைவர் கமல்ஹாசன் உறுதி

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள லஞ்சப் பட்டியலை நேற்று வெளியிடுகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றுமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக அரசியலில் நாங்கள் 3-வது அணியாக இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. இதுகுறித்து ஜனவரியில் சொல்கிறேன். 3-வது அணி அமைந்தால் கண்டிப்பாக நடிகர் கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர்.

தமிழகத்தில் தொட்டில் முதல்சுடுகாடு வரை லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் ரூ.300, ஆணாக இருந்தால் ரூ.500, பிறப்புச் சான்றிதழ் பெற பெண்ணுக்கு ரூ.200, ஆணுக்கு ரூ.500, சாதிச் சான்றிதழ் பெறபெண்ணுக்கு ரூ.500, ஆணுக்குரூ.3,000, ஓட்டுநர் உரிமம் பெறபெண்ணுக்கு ரூ.1,000, ஆணுக்குரூ.5,000, பாஸ்போர்ட் பெற காவல் துறை சரிபார்ப்புக்கு ரூ.500, குடும்ப அட்டை பெறரூ.1,000, இடம் பதிவு செய்யரூ.10,000, பட்டா பரிவர்த்தனைக்கு பெண்ணுக்கு ரூ.5,000, ஆணுக்கு ரூ.30,000, சொத்து வரிக்கு ரூ.5,000, மும்முனை மின் இணைப்பு பெற ரூ.15,000, தண்ணீர் இணைப்புக்கு ரூ.10,000, புதை சாக்கடை இணைப்பு பெற ரூ.5,000, திட்டஅனுமதி பெற ரூ.5,000 முதல் ரூ.30,000, பரம்பரை வாரிசுச் சான்றிதழ் பெற ரூ.500, முதியோர் ஓய்வூதியம் அல்லது கணவரை இழந்த ஓய்வூதியம் பெறரூ.500, பிணவறையில் ரூ.2,000,இறப்புச் சான்றிதழ் பெற ரூ.500என லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

மக்கள் நீதி மய்யம் அரசு அமைந்தால் வீடுதோறும் கணினி வழங்கப்படும். அது, இலவசம் அல்ல. அரசின் முதலீடு- மக்களின் உரிமை. ஒவ்வொரு மாவட்டத்தையும் தலைநகருக்கு இணையாக, அந்தந்த தொழில் சார்ந்த தலைநகரம் ஆக்குவதே எங்கள் திட்டம்.

ஜாதி கணக்கெடுப்பு கூடாது

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மக்கள் நீதி மய்யம் எதிர்க்கிறது. ஆனால், இட ஒதுக்கீடு என்பது தேவை. மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சிதான். தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான். பாஜக மதவாதக் கட்சி இல்லை என்று சொல்லவே முடியாது. டார்ச் லைட் சின்னம் எங்களுக்குத் தான் சேர வேண்டும். அதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார். கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் முருகானந்தம், தலைமை நிலைய பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x