Published : 28 Dec 2020 07:16 AM
Last Updated : 28 Dec 2020 07:16 AM
கரோனா தொற்று காலத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடங்களை ‘பென் டிரைவ்’ மூலம் அளித்த விழுப்புரம் மாவட்டஅரசுப் பள்ளி ஆசிரியைக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச்16-ம் தேதி முதல் பள்ளிகள்மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், விழுப்புரம் அருகே செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை ந.கி. ஹேமலதா, 10-ம்வகுப்பு மாணவர்களுக்கான 53 தமிழ் பாடங்களை ‘பென் டிரைவ்’ மூலம் பதிவு செய்து இலவசமாக வழங்கினார்.
மாணவர்களின் சந்தேகங்களை தொலைபேசி மூலம் நிவர்த்தியும் செய்தார். இதுகுறித்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றும்போது, “கரோனா தொற்றுக்காலத்தில் மாணவர்களுக்குஇயங்குபட காணொலி வாயிலாக (Animated video) ஆசிரியைஹேமலதா பென் டிரைவ் மூலம் பதிவு செய்து வழங்கினார். அவரை பாராட்டுகிறேன். இணையவழி கல்வி என்பது இச்சூழ்நிலையில் விலை மதிப்பில்லாதது” என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து ஆசிரியை ஹேமலதாவிடம் கேட்டபோது, “என் உழைப்புக்கான அங்கீகாரத்தை பிரதமர் கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு நான் பணியாற்ற ஒத்துழைப்பு அளித்த முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், விழுப்புரத்தில் ஆசிரியை ஹேமலாதாவின் வீட்டுக்கு நேற்று சென்று அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT