Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM

‘மக்கள் கிராம சபை’யாக மாறியது திமுகவின் ‘கிராம சபைக்’ கூட்டம் தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம்: ஸ்டாலின்

மரக்காணத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

விழுப்புரம்

அரசின் தடை உத்தரவால் திமுக நடத்தும் ‘கிராம சபைக் கூட்டம்’ மக்கள் கிராம சபைக் கூட்டம் என பெயர் மாற்றப்பட்டது. மரக்காணத்தில் இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், “இதற்கும் அரசு தடை விதித்தாலும் தொடர்ந்து நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.

‘அதிமுகவை அகற்றுவோம்’ என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று அவர் பேசியது:

‘கிராம சபைக் கூட்டம் நடத்தக் கூடாது’ என்று உத்தரவிட்டு, திட்டமிட்டு அதிமுக அரசு குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறது. இதனால், நாங்கள் ‘மக்கள் கிராம சபை’ என்ற பெயரில் கூட்டம் நடத்துகிறோம். பயந்து பெயரை மாற்றியதாக நினைக்கக் கூடாது. மக்கள் சபை கூட்டத்துக்கு தடை விதித்தால் அதையும் கடந்து நடத்துவோம். மோடியே வந்தாலும் தடுக்க முடியாது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..

அரசியலில் குடும்பம் இருக்கலாம். ஊழல் குடும்பத்தினர் இருக்கக் கூடாது. முதல்வர் பழனிசாமிமீதான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தடையாணைபெற்றுள்ளார். திமுகவை பொறுத்தவரை ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் விடுதலை பெற்று வந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் பழனிசாமி மீதான வழக்கை, தடையை நீக்கி நடத்துவோம்.

திமுகதான் ஆளும்கட்சி

இக்கூட்டத்தில், எங்கள் மீதுநம்பிக்கை வைத்து உங்கள் குறைகளை என்னிடம் சொல்லியுள்ளீர்கள். கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக ஆட்சியில் இல்லா விட்டாலும் திமுகதான் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது.

கரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது தமிழக அரசு ரூ.1,000 வழங்கியது. தற்போது பொங்கலை காரணம் காட்டி ரூ.2,500 வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், ரூ. 2,500வழங்க வேண்டும்.

இதேபோல பத்தாம் வகுப்புமாணவர்கள் தேர்வு ரத்து, மின்சாரம் தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு, குப்பை அள்ளவரியை ரத்துசெய்ய வேண்டும்என நாங்கள் கூறியதை ஆளும்அரசு செய்து வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சிதான் நடந்து வருகிறது.

ஆனாலும், விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்தவேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே மாநில அரசு அதிமுக அரசுதான்.

அதிமுகவை நிராகரித்து திமுகவை ஆட்சிக்கு கொண்டுவருவதே நம் லட்சியமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x