Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

டிஎன்பிஎஸ்சி ஆதார் எண்ணை இணைக்க கூறியதால் குரூப்-1 தேர்வு ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் 9 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தவிப்பு

மதுரை

ஜன.3-ல் நடைபெறவுள்ள குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற டிஎன்பிஎஸ்சி அறிவிப்பால் தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமலும் தவிக்கின்றனர்.

கரோனா ஊரடங்கால் 2020 ஏப்.5-ல் நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததால் 2021 ஜன.3-ல் குரூப் -1 தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், முன்னறிவிப்பு ஏதுமின்றி

திடீரென தேர்வர்கள் ஒருமுறை பதிவு செய்த (one time registration) ஐடியுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என தேர்வாணையம் கூறியது. இதனால், ஹால் டிக்கேட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து மதுரையைச் சேர்ந்த குரூப்-1 தேர்வர் மு.ர.சரணவன் கூறியதாவது:

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என எதுவும் குறிப்பிடவில்லை. தேர்வுக்குக் குறுகிய காலமே இருக்கும் நிலையில் திடீரென ஆதார் எண்ணை டிஎன்பிஎஸ்சி ஐடியுடன் இணைத்தால் மட்டுமே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியும் எனக் கூறியது அதிர்ச்சியாக உள்ளது.

ஆதார் சட்டங்களின்படி ஆதார் எண் எந்தவொரு தேர்வுக்கும் தகுதியில்லை என உச்ச நீதிமன்றம் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளது. அப்படியிருக்கையில் ஒரு தேர்வர் தேர்வினை எழுதமுடியாமல் போகும்பட்சத்தில் அது சட்டத்துக்குப் புறம்பானதாகிவிடும்.

தேர்வர்கள் பலருக்கு ஆதார் எண்ணில் விவரங்கள் பிழையாகவோ, தவறாகவோ இருக்கலாம். இன்னும் சிலருக்கு ஆதார் எண்கூட இல்லாமல் இருக்கலாம். இதன்காரணமாக ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் போகலாம்.

ஐடி புதுப்பிப்பு

மேலும், ஒருமுறைப் பதிவு எனப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் ஐடி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் புதுப்பிக்க வேண்டும். இதற்குக் குறிப்பிட்ட கட்டணத்தைத் தேர்வர்கள் இணைய வழியில் செலுத்த வேண்டும். தற்போது ஒருமுறைப் பதிவைப் புதுப்பிக்க தேர்வர்கள் முயன்றபோது வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்தும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.

எத்தனை முறை முயன்றாலும் அத்தனை முறையும் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படுகிறதே தவிர புதுப்பிக்கப்படுவதில்லை. ஆதார் எண்ணை இணைத்திருந்தாலும் இந்த ஒருமுறைப் பதிவைப் புதுப்பித்திருந்தால் மட்டுமே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.

குரூப்-1 தேர்வுக்கு இன்னும்9 நாட்கள் மட்டுமே இருப்பதால் தேர்வர்கள் தேர்வுக்குப் படிப்பார்களா? அல்லது தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட்டை பெற போராடுவார்களா?. அதனால், தேர்வு தயாரிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x