Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM
``தமிழகத்தில் உருவாகவுள்ள 3-வது அணியில் ரஜினி இணைந் தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பேசி முடிவெடுப்போம்’’ என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெயரில் தென்மாவட்டங்களில் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பாளையங்கோட்டையில் நேற்று இளைஞர்கள் மற்றும் மகளிருடன் அவர் கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி நிச்சயம் அமையும். நல்லவர்களோடு இணைந்து இந்த அணியை அமைப்போம். நல்லவர்கள் எங்கள் பக்கம் வந்து சேர்வார்கள். அந்த அணியில் ரஜினியும் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பேசி முடிவு செய்வோம். ஒவைசியோடு கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் எங்களுக்கு பெரும் ஆதரவு அளிக்கிறார்கள். சட்டப்பேரவையில் மீனவர் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்றுதான், மீனவர்கள் குறித்து அதிகமாக பேசுகிறேன். அவர்களால் நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் அந்நிய செலவாணி கிடைக்கிறது.
அரசியலில் ஈடுபட்டால் எனக்கு அசவுகரியம் அதிகம் என்றாலும், மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த களத்தில் முன் நிற்கிறேன். எம்.ஜி.ஆரை அரசியலுக்காக யார் கையில் எடுக்கிறார்கள், அன்பினால் யார் கையில் எடுக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
தேர்தல் ஆணையம் எங்கள் கட்சிக்கான சின்னத்தை ஒதுக்கவில்லை. சட்டப்படி நியாயமாக எங்களுக்குரிய சின்னம் கிடைக்க வேண்டும். இதைத் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்துவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து சில நாட்களில் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT