Published : 27 Nov 2020 07:20 AM
Last Updated : 27 Nov 2020 07:20 AM
தஞ்சாவூரில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரத்தின் கிளைகளை மட்டும் வெட்டாமல், 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டது குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக வீதியோரங்களில் மா, தேக்கு, வேம்பு, புங்கன், செம்மரம், உதயன்,யூகலிப்டஸ் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் ஏராளமான பறவையினங்கள், அணில்கள் கூடுகட்டி வசித்து வந்தன.
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிள்ளையார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் நேற்று முன்தினம்சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் மரத்தின் கிளைகளை மட்டும்வெட்டுவதற்கு பதிலாக வேம்பு, செம்மரம், தேக்கு, புங்கன் உள்ளிட்ட 40 மரங்களை பொக்லைன்இயந்திரங்களை கொண்டு வேரோடு பிடுங்கியதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.
அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருவோர் இந்த மரங்களை15 முதல் 30 ஆண்டுகளாக வளர்த்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த மரங்களை வேரோடு பிடுங்கியதால் அப்பகுதியினர் மட்டுமல்லாமல், இதுகுறித்து கேள்விப்பட்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.
ஆதாயம் தேடும் நோக்கம்?
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: நன்கு வளர்ந்த மரங்களை புயலைக் காரணமாகக் காட்டி வேரோடு பிடுங்கிய செயல் வேதனைக்குரியது. புயலால் மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அல்லதுமரங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதியிருந்தால் மரங்களின் கிளைகளை மட்டுமே வெட்டியிருக்கலாம். அதைவிடுத்து, வேரோடு மரங்களைப் பிடுங்கியுள்ளனர். இந்த மரங்களைக் கொண்டு ஆதாயம் தேடும் விதமாகவே வேரோடு பிடுங்கப்பட்டதாக கருதுகிறோம். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT