Published : 25 Nov 2020 03:14 AM
Last Updated : 25 Nov 2020 03:14 AM

கடந்த காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டபகுதிகளை பார்வையிட்டு திட்டமிடுங்கள் பேரிடர் மீட்பு குழுவினருக்கு அறிவுறுத்தல்

நிவர் புயல் மீட்புப் பணிக்காக சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று வந்த மாநில பேரிடர் மீட்புக் குழுவினர். (அடுத்த படம்) மீட்பு பணியில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட்ட மண்வெட்டி, ரப்பர் படகுகள், காஸ் லைட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள்.

தஞ்சாவூர்

நிவர் புயலை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினர், கடந்த காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை உடனடியாக சென்று பார்வையிட்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் அறிவுறுத்தியுள்ளார்.

நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக சென்னையிலிருந்து மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 80 பேர் தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்துக்கு நேற்று வந்தனர்.

அவர்களுடன் தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் 114 பேர் மற்றும் உள்ளூர் போலீஸார் 50 பேர் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு வல்லம், திருவையாறு, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்பு பணிகளுக்குத் தேவையான மண்வெட்டி, கடப்பாரை, கயிறு, ரப்பர் படகுகள், காஸ் லைட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், அரிவாள்கள் உள்ளிட்ட உபகரணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக மீட்புப் பணியில் ஈடுபடவுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினர் மத்தியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பேசியதாவது:

நிவர் புயலால் எந்த ஒரு உயிரிழப்பும், உடமை இழப்பும் ஏற்படக்கூடாது. பொதுமக்களுக்கு தேவையான, உரிய உதவிகளை செய்து நீங்கள் காவல் துறையின் பெயரைக் காப்பாற்ற வேண்டும்.

உங்களுக்கு உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதுகுறித்த வீடியோ அல்லது புகைப்படத்தை காவல் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு அனுப்பி வைத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க உதவும். உங்கள் பணிகளை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு உயர் அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டுள்ள பகுதிக்கு நீங்கள் சென்றதும், அங்கு கடந்த காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று பார்வையிட வேண்டும். மேலும், நிவாரண முகாம்களையும் பார்வையிட வேண்டும். அதற்கேற்ப உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x