Published : 20 Nov 2020 03:14 AM
Last Updated : 20 Nov 2020 03:14 AM
சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி’யை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடனில் செயல்படும் அமைப்புகள் மூலம் விருது மற்றும் ரூ.8.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புற சூழல் மீது அக்கறையுடன் செயல்படும் பள்ளி மாணவர்களுக்காக ‘மாணவர் பருவ நிலை விருது’ வழங்கும் பணியை ஸ்வீடன் நாட்டில் செயல்படும் அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. சுற்றுச்சூழல், பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்தும் 12 முதல் 17 வயதுள்ள பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விருது வழங்கப்படுகிறது.
அதன்படி, சுத்தமான காற்று விருதுப் பிரிவில் இந்தாண்டுக்கான விருதை சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த, திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா சர்வதேச பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறும்போது, “துணிகளை இஸ்திரி போடுவதற்காக பயன்படுத்தப்படும் கரிக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும், எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம், நீர் மற்றும் காற்று மாசு ஏற்படும். சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை பயன்படுத்தும்போது மரங்கள் காப்பாற்றப்படும். மாசு ஏற்படுவது தடுக்கப்படும். ஒரு மரம், தினசரி 5 பேருக்கு ஆக்ஸிஜன் தருகிறது. அந்த மரங்களை பாதுகாப்பதன் மூலம் மழையை பெற முடியும்.
இந்த வண்டியின் மேற்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய ஒளியால் 5 மணி நேரம் சார்ஜ் செய்யும்போது, 6 மணி நேரம் வரை இஸ்திரி செய்ய முடியும். இதற்கு, ரூ.30 ஆயிரம் செலவாகும். இதன்மூலம் சுமார் 7 ஆண்டுகள் பயன்பெறலாம்.
விருது மற்றும் பதக்கத்தை காணொலி மூலம் ஸ்வீடன் துணை பிரதமர் இசபெல்லாலோ வழங்கி உள்ளார். காற்று மாசுப்படுவதை தவிர்ப்போம், பருவநிலை மாற்றத்தை தடுப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT