Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் படிப்படியாக விலை குறைந்து வரும் சின்ன வெங்காயம்

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த சின்ன வெங்காயம்.

திண்டுக்கல்

தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை நூறு ரூபாய்க்கு மேலாக அதிகரித்த நிலையில் தற்போது வரத்து அதிகரிப்பால் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் பெரிய வெங்காய சந்தையான திண்டுக்கல் சந்தை வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும். இங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயமும், தமிழகத்தின் கரூர், அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயமும் வருகிறது. இதனை கமிஷன் கடைக்காரர்கள் வாங்கிச் செல்கின்றனர்

கடந்த ஒரு மாதமாக சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-க்கு மேலாக விற்பனையானது. அதிகபட்சமாக சில வாரங்களுக்கு முன்பு ரூ.120-க்கு விற்றது.

இந்தநிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து, வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்தது. இதையடுத்து எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்தபோதும், தேவை அதிகரிப்பால் வெங்காயம் விலை சிறிதளவு மட்டும் குறைந்தது.

இந்நிலையில் தற்போது வடமாநிலங்களில் மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயமும் தற்போது இருப்பில் உள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் வெங்காய கமிஷன் மண்டி வர்த்தகர் சங்கத் தலைவர் ஏ.வி. சவுந்திரராஜன் கூறியதாவது: வடமாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று சின்ன வெங்காயம் திண்டுக்கல் மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்றது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்கிறது.

தற்போது நடவு செய்துள்ள வெங்காயம் வர எப்படியும் 2 மாதத்துக்கு மேல் ஆகும் என்பதால், அதுவரை ரூ. 50-க்கு குறைய வாய்ப்பில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x