Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
விழுப்புரம்: தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தாலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் இம்மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தை ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி அலுவலர்களே மேற்கொண்டுள்ளனர்.
அப்படியான நிர்வாக நடைமுறையில் உள்ள அலுவலகத்தில் ஒன்று விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். இந்த அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அறை கதவில் “கூட்டம், மாநாடு, பேரணி என்ற பெயரில் எந்த ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் நன்கொடை கேட்டு தொடர்பு கொள்ள வேண்டாம்” என்று சுவரொட்டி ஒட்டியுள்ளனர். இதுகுறித்து அந்த அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, “கரோனா நிவாரணம் என்று தொடக்கத்தில் நன்கொடை கேட்டு வந்தார்கள். பின்னர் இதனை வழக்கமாக்கி கூட்டம், பேரணி என்று தொடங்கி விட்டார்கள். அதனால் இப்படி சுவரொட்டி ஒட்ட வேண்டியதாயிற்று” என்றனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் மகேந்திரனிடம் கேட்டபோது, ”நன்கொடை கொடுப்பதும், கொடுக்காததும் அவரவர் விருப்பம். இதற்கெல்லாம் அலுவலகம் முன் சுவரொட்டி ஒட்ட வேண்டிய அவசியமில்லை. இது குறித்து விசாரணை செய்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT