Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை பாஜக மேற்கொள்ளும் வேல் யாத்திரை அக்கட்சிக்கு கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2014, 2019 என தொடர்ந்து இரு மக்களவைத் தேர்தலில் வென்று தனித்து ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமேஎம்.பி.க்கள் யாரும் இல்லை. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் இணைந்து தனித்துப் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே. 39 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாநிலம் என்பதால் தமிழகத்தில் கால் பதிக்க பாஜக தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், இதுவரை அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜகவின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு என்று பலரும் பாஜகவில் இணைந்தனர். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏகு.க.செல்வம், பாஜக ஆதரவாளராக மாறினார். இவை அனைவரது பார்வையையும் பாஜகவைநோக்கி திருப்பியுள்ளன.
இதைத் தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தமிழக பாஜக தொடங்கியுள்ளது. மாநில தலைவர் எல்.முருகன், நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். முருகப் பெருமானின் அறுபடை வீடான திருத்தணியில் 6-ம் தேதி தொடங்கும் வேல் யாத்திரை, 9-ம் தேதி ரத்தினகிரி, 20-ம் தேதி சென்னிமலை, 22-ம் தேதி மருதமலை, 23-ம் தேதி பழநி, 25-ம் தேதி சுவாமிமலை, டிசம்பர் 1-ம் தேதி திருப்பரங்குன்றம், 2-ம் தேதி பழமுதிர்ச்சோலை என்று புகழ்பெற்ற முருகன் ஆலயங்கள் வழியாக சென்று திருச்செந்தூரில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. பல்வேறுகட்சிகளும், அமைப்புகளும் வேல்யாத்திரையை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. வேல் யாத்திரைக்கு போட்டியாக ஏர் கலப்பை யாத்திரை நடத்துவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
ஆனாலும், வேல் யாத்திரை நடந்தே தீரும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “தமிழ்க் கடவுள்முருகன் மற்றும் கந்த சஷ்டிகவசத்தை இழிவுபடுத்தியவர்களையும், அதற்கு பின்னணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளையும் மக்களிடம் அம்பலப்படுத்துவோம். வேல் யாத்திரைதமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும். அதனால்தான் இந்த யாத்திரையை திமுகவின் கூட்டணி கட்சிகள் எதிர்க்கின்றன. எதிர்ப்புகள்தான் எங்களுக்கு உத்வேகம் அளிக்கும். யாத்திரை வெற்றிகரமாக நிறைவுபெறும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT