Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

தமிழகத்தில் தொழிற்சாலைக்கான நிலம் கையகப்படுத்துவதில் உச்சவரம்பு உயர்வு முதலீடுகள் அதிகரிக்கும் என தொழில் துறை தகவல்

சென்னை

தமிழகத்தில் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யும் நிறுவனங்கள் நிலம்கையகப்படுத்துவதில் உள்ள உச்சவரம்பை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. நில நிர்வாகத் துறையின் கீழ் வரும் இந்த உச்சவரம்பு தற்போது மாற்றியமைக்கப்பட்டு அதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு, அரசிதழிலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக புன்செய் நிலங்கள் 120 ஏக்கர், நன்செய் நிலங்கள் 60 ஏக்கர் வரை அரசின் முன் அனுமதியின்றி, தனியாரிடம் இருந்து ஆலை நிர்வாகங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

வருவாய்த் துறையின் கீழ் வரும் நில நிர்வாகத் துறை வெளியிட்ட இந்த அரசாணை குறித்து, தொழில்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் 2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் தற்போது தொழிற்சாலை அமைக்க பல நிறுவனங்கள் விரும்பும் நிலையில், தற்போது தமிழக அரசு நில உச்சவரம்பை உயர்த்தியுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் அதிக அளவில் பயன்பெறும்.

குறிப்பாக, தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கான நிலங்கள் கையகப்படுத்தும்போது, முன்பெல்லாம் 100 ஏக்கர் என்றால் அரசின் முன் அனுமதி பெறவேண்டியிருந்தது. தற்போதுஇந்த உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x