Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிகுறித்து யாரும் கவலைப்படக் கூடாது என்று கட்சி நிர்வாகிகளிடம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மக்கள் நீதி மய்யம்கட்சி நிர்வாகிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை எதிர்கொள்வது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 3 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி, சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது.
சட்டப்பேரவை தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ள கட்சியை கட்டமைப்பு ரீதியாக பலப்படுத்துவது, மக்கள் நீதி மய்யத்துக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் எவை, தேர்தல் பணிகளை விரைவுபடுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் நடந்த ஓட்டலுக்கு வெளியே கமல்ஹாசனுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சிவப்பு நிற பிரச்சார வேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ‘தலைநிமிரட்டும் தமிழகம், மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே’ என்று எழுதப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:
தேர்தலுக்கான பணியை மாவட்டச் செயலாளர்கள் தீவிரப்படுத்த வேண்டும். மக்களின் ஆதரவு மக்கள் நீதி மய்யத்துக்கு உள்ளது. எனவே, பூத் கமிட்டி வரை பொறுப்பாளர்களை நியமித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கூட்டணியைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். கூட்டணி என்பது என்னுடைய வேலை. வெற்றிக்கு அனைவரும் உழைக்க வேண்டும். நம் கூட்டணி மக்களுடன்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலோசனை கூட்டத்தில் கட்சிகட்டமைப்பு ரீதியாக செயல்பட்டுவரும் மாவட்டச் செயலாளர்கள், இளைஞர் அணி, மகளிர் அணிஉள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர்,மதுரை, கிருஷ்ணகிரி, சேலம்,காஞ்சிபுரம், திருச்சி, நாகப்பட்டினம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இன்று திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் கமல் ஆலோசனை நடத்த உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT