Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM

சிறுநீரக மாற்றுக்கு ஏற்பாடு செய்வதாகரூ.60 லட்சம் மோசடி: ஒருவர் கைது

காரைக்குடி: காரைக்குடியில் தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி, ஒருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

காரைக்குடி பாரிநகர் அதியமான் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பூமாலை (54). பணம், கொடுக்கல் வாங்கல் தொழில் செய்தார். இவரது 2 சிறுநீரகங்களும் பழுதடைந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், அவரது குடும்பத்தினருடன் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த நெப்போலியன், அவரது தங்கை நான்சி ஆகியோர் நெருங்கிப்பழகி உள்ளனர். இவர்கள் இருவரும், அந்த சமயத்தில், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துள்ளனர். இதையடுத்து, இருவரும் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்வதாகப் பூமாலையிடம் கூறியுள்ளனர். இதை நம்பி பூமாலையின் குடும்பத்தினர் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் 2016-ம் ஆண்டு ரூ.60 லட்சம் வரை கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யாததோடு, பணத்தையும் தரவில்லை. பணத்தைக் கேட்கச் சென்ற பூமாலையையும், அவரது நண்பர்களையும் நெப்போலியன் குடும்பத்தினர் அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து நெப்போலியன், நான்சி, அவர்களது தந்தை அருளாந்துசாமி, தாயார் புஷ்பா ஆகிய 4 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருளாந்துசாமியைக் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x