Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
நாகர்கோவிலில் கணவர் இறந்து ஓராண்டான நிலையில் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமதாஸ் என்பவரின் மகன் ரஞ்சித்குமார்(32). மருத்துவ பிரதிநிதியாக இருந்து வந்தார். இவரது மனைவி ராசி (28). இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் இருந்தனர். ரஞ்சித்குமார் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு இறந்து போனார்.
ரஞ்சித்குமாரின் மரணத்துக்கு பின்பு ராசியும், 2 குழந்தைகளும், ராமதாஸ் வீட்டிலேயே இருந்தனர். கூலி வேலையின் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் சிரமத்துடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ரஞ்சித்குமார் இறந்த ஓராண்டு நினைவு நாளை சமீபத்தில் வீட்டில் கடைபிடித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டில் குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்துள்ளனர். குளியலறையில் உடல் கருகிய நிலையில் ராசி இறந்து கிடந்தார். நாகர்கோவில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மரணத்துக்கு முன்பு ராசி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை வீட்டின் படுக்கை அறையில் போலீஸார் கைப்பற்றினர். கடிதத்தில், `கணவர் இறந்து ஓராண்டாகிய நிலையில், அந்த சோகத்தில் இருந்து மீளமுடியவில்லை. என்னால் இனியும் இப்படியொரு வாழ்க்கை வாழமுடியாது. நானும், குழந்தைகளும் தூக்க மாத்திரை சாப்பிட்டோம். என்னையும், குழந்தைகளையும் என் கணவரிடமே நல்லபடியாக அனுப்பி வையுங்க. என்னுடைய போனில் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளேன் பாருங்கள். மன்னித்து விடுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
ராசி தற்கொலைக்கு முன்பு செல்போனில் பதிவு செய்துள்ள வீடியோவில், `எனது பெற்றோரை விடவும், எனது கணவரின் குடும்பத்தினர், என்னையும், குழந்தைகளையும் நன்கு பார்த்துக் கொண்டனர். அனைவரும் மன்னித்து விடுங்கள்’ என பேசியுள்ளார்.
தூக்க மாத்திரைகளை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அவற்றை உட்கொண்ட ராசி, உயிர் பிழைத்து விடக்கூடாது எனக்கருதி, வார்னிஷை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT