Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM

நாகை மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

நாகப்பட்டினம்

நாகை மீன்வளப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் சென்னையைச் சேர்ந்த மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.

நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை www.tnjfu.ac.inஎன்ற இணையதளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமார் நேற்று வெளியிட்டார்.

மொத்தம் 386 இடங்களைக் கொண்ட 10 இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து, நேற்று வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த ப.ஆதித்யா நாகராஜன் 195.50 கட்-ஆப் மதிப்பெண்களுடன் முதல் இடத்தையும், தூத்துக்குடியைச் சேர்ந்த பா.ரிஷிகேசவன் 2-வது இடத்தையும், தேனியைச் சேர்ந்த சி.கோபிகிருஷ்ணா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில், சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நவ.7-ம்தேதி மீன்வளப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து, நிகழாண்டுக்கான பொது கலந்தாய்வு இணையதளம் வழியாக நவ.9 முதல் நவ.11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை, www.tnjfu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதள முகவரி வழியாக நவ.27-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு pgadmisson@tnjfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04365-256430, 94426 01908 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x