Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

தமிழகம் முழுவதும் பாஜக நடத்த உள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது டிஜிபியிடம் திருமாவளவன் கோரிக்கை; பாதுகாப்பு கோரி பாஜக மனு

செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்.

சென்னை

தமிழகத்தில் பாஜகவினர் வரும் 6-ம் தேதி முதல் நடத்தவுள்ள வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதியளிக்க கூடாது என வலியுறுத்தி டிஜிபி ஜே.கே.திரிபாதியிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேற்று மனு அளித்தார். வேல் யாத்திரைக்கு அனுமதி, பாதுகாப்பு கோரி பாஜகவினர் டிஜிபியிடம் மனு கொடுத்தனர்.

டிஜிபியிடம் கொடுத்த மனுவில் திருமாவளவன் கூறியிருப்பதாவது:

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக வேல் யாத்திரை என்ற பெயரில் நவ.6 முதல் டிச.6 வரை பரப்புரைப் பயணம் மேற்கொள்ளப்போவதாக பாஜகவினர் அறிவித்துள்ளனர்.

டிச.6 அம்பேத்கர் நினைவு நாள். அதேபோல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்நாளைத் தேர்ந்தெடுத்து யாத்திரையை நிறைவு செய்ய திட்டமிட்டிருப்பது அம்பேத்கரின் நினைவு நாளை கடைபிடிப்போருக்கும் பாபர் மசூதி பிரச்சினையை மறந்து இருப்போரையும் சீண்டுவதாக உள்ளது.

தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது. மக்களை பிளவுபடுத்தி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:

வேல் யாத்திரை மூலம் சாதி,மத வெறியைத் தூண்டி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த பாஜகவும் இந்துத்துவ சக்திகளும் முயற்சிக்கின்றன.

மனுதர்மத்தை பெரியார் எதற்காக எதிர்த்தார் என்பதை இணையவழிக் கருத்தரங்கில் நான்பேசியதை தவறாகப் பரப்புகிறார்கள். வடமாநிலங்களைப் போல சாதியின், மதத்தின் பெயரால் எப்படி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அதேபோல தமிழகத்தில் இந்த உத்தியைக் கையாளுகிறார்கள். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் புகைப்படத்தை பாஜக பயன்படுத்துவதை அதிமுகவும், முதல்வரும், துணை முதல்வரும் வேடிக்கை பார்க்கக்கூடாது.

திமுக கூட்டணியில் ஒரு பதற்றத்தை உருவாக்க பாஜகவினர் முயல்கின்றனர். 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக அரசின் முடிவை வரவேற்கிறேன். அதேநேரம் நீதிபதி கலையரசன் அறிக்கையின்படி 10 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நடிகர் ரஜினி நல்ல முடிவை எடுத்திருக்கிறார். சாதி, மத அரசியலில் சிக்கி மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் நலத்தோடும் வளத்தோடும் ரஜினி இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பாதுகாப்பு கோரி பாஜக மனு

பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வழக்கறிஞர் அணித் தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்ட 5 நிர்வாகிகள் வேல் யாத்திரைக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி திரிபாதியிடம் நேற்று நேரில்மனு அளித்தனர். வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்குமாறு டிஜிபியை தமிழக பாஜக தலைவர்எல்.முருகன் கடந்த மாதம் நேரில் சந்தித்து வலியுறுத்தி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x