Published : 31 Oct 2020 03:13 AM
Last Updated : 31 Oct 2020 03:13 AM

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.படங்கள்: எல்.பாலச்சந்தர்

கமுதி

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கே.என்.நேரு, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சுதந்திரப் போராட்டத்துக்காகப் பாடுபட்டவர் தேவர். ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குறிப்பாக விவசாயிகளுக்காக குரல் கொடுத்தவர்.

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்காக வெளியிடப்பட்ட அரசாணையை விரைவில் நடைமுறைப்படுத்தி இந்தாண்டே மருத்துவ மாணவர் கவுன்சிலிங்கில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இச்சட்டம் செல்லுமா?, செல்லாதா?, யாராவது நீதிமன்றத்துக்குச் சென்றால் என்னவாகும். இதையெல்லாம் பரிசீலித்து அரசு மாணவர்களின் நலன் கருதி செயல்பட வேண்டும்” என்றார்.

வேல் யாத்திரையால் அச்சம்

இதேபோன்று, பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், இளைஞர் அணி மாநிலத் தலைவர் வினோஜ், மாநில செய்தித் தொடர்பாளர் குப்புராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் எனப் பாவித்து வாழ்ந்தவர் தேவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் நாடாளுமன்றத்தில் தேவர் சிலை நிறுவப்பட்டது.

நாங்கள் தொடங்க உள்ள வேல் யாத்திரையைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயமடைந்துள்ளார். அவர் முதல்வராகும் கனவை இந்த வேல் யாத்திரை களைத்துவிடும். மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும்.

2014-க்குப் பிறகு ஒரு மீனவர் கூட இலங்கை கடற்படையால் சுடப்பட்டு இறக்கவில்லை. அதற்கு முன் 600-க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் தினகரன், மதிமுக உயர்நிலைக் குழுச் செயலாளர் புலவர் செவந்தியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் அழகு சுந்தரம், கருணாஸ் எம்எல்ஏ, தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் சார்பில் மலேசியா பாண்டியன் எம்எல்ஏ, ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் சேதுராமன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x