Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

சென்னையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ.77 கோடியில் புதிய கட்டிட வளாகம்: நவீன அவசர சிகிச்சை மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி, பதிவுத் துறை கட்டிடம், ராஜபாளையம், பழநியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடங்கள், மதுரை வணிகவரி அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 3 மின்தூக்கிகள் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி நேற்று காணொலியில் திறந்துவைத்தார். உடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி.வீரமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வணிகவரி, பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், வணிகவரி ஆணையர் சித்திக்.

சென்னை

வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், சென்னை நந்தனத்தில் ரூ.73 கோடியே 17 லட்சத்து 68 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இப்புதிய கட்டிடம் தரை மற்றும் 7 தளங்களுடன், 60 வணிகவரி அலுவலகங்கள் மற்றும் 7 பதிவுத் துறை அலுவலகங்களை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, ராஜபாளையம் மற்றும் பழநியில் ரூ.4 கோடியே 7 லட்சத்து 15 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிக வரி அலுவலக கட்டிடங்கள், மதுரைஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள 3 மின் தூக்கிகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

தீவிர சிகிச்சை மையம்

ஏசிடி பைபர்நெட் நிறுவனம், கூட்டாண்மை சமூக பொறுப்பு செயல்பாட்டின் கீழ், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 லட்சம் மதிப்பில் 10 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த நவீன தீவிர சிகிச்சை மையத்தைகரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நன்கொடையாக நிறுவியுள்ளது.

இந்த மையத்தில் 10 படுக்கைகள், ஆக்ஸிஜன் இணைப்புகள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் உள்ளன. மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக எங்கெல்லாம் அவசர பிரிவின் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் இந்த மையத்தை எடுத்துச் செல்லலாம். நோயாளிகளை ஒரே இடத்தில் இருந்து கவனிக்க மையகண்காணிப்பு வசதி, புகைப்படகருவிகள் உள்ளன. இத்தகையவசதிகள் கொண்ட மாநிலத்திலேயே முதல் மையம் இதுவாகும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, தலைமைச் செயலர் கே.சண்முகம், செயலர்கள் ஜெ.ராதாகிருஷ்ணன், பீலா ராஜேஷ், வணிகவரி ஆணையர் எம்.ஏ.சித்திக், பதிவுத் துறை தலைவர் பொ.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x