Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM
தமிழகத்தில் முக்கியக் கோயில்களில் சித்த மருத்துவமனை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மதுரையைச் சேர்ந்த இந்திய மருத்துவ நல அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் மருத்துவர் ஜெயவெங்கடேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வருமானம் வரும் 49 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்கப்படும் என தமிழக அரசு 1970-ல் அரசாணை பிறப்பித்தது. ஆனால், இதுவரை 6 கோயில்களில் மட்டுமே சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அரசாணை அடிப்படையில் அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிடும்போது, “திருப்பதி கோயிலில் சித்த மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது” என்றார்.
கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.பி.நாராயணகுமார் வாதிடும்போது, “வடபழனி முருகன் கோயில், திருத்தணி, மருதமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் முருகன் கோயில்கள் மற்றும் ராமேசுவரம் கோயில்களில் சித்த மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கோயில்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கும் திட்டமும் உள்ளது” என்றார்.
அப்போது நீதிபதிகள், “மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் சித்த மருத்துவமனை ஏன் அமைக்கவில்லை? சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில்தான் கோயில்களில் சித்த மருத்துவமனை அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தின் பலன் அனைவரையும் சென்றடைய வேண்டும். சித்த மருத்துவத்தை மேம்படுத்துவது அரசின் கடமையாகும்” என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் 6 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் எப்போது தொடங்கப்பட்டன? தமிழகத்தில் பிற கோயில்களில் சித்த மருத்துவமனைகள் தொடங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக சுகாதார செயலர், இந்து சமய அறநிலையத் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.19-க்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT