Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

வேறு எதையாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளும் வரை இந்த நடைபயிற்சி உடன் இருக்கட்டும் என நடக்க ஆரம்பித்தோம்

வேறு எதையாவது ஒன்றைப் பற்றிக்கொள்ளும் வரை இந்த நடைபயிற்சி உடன் இருக்கட்டும் என நடக்க ஆரம்பித்தோம். மாஸ்க் அணிந்து இருந்தாலும் இன்னார் இவர் என அடையாளம் கண்டுகொள்ளப் பழகி இருப்பதை நினைத்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தால், சிக்னல் அருகில் அமராவதி காபிக் கடை. நாங்கள் கடக்கக் காத்திருப்பது போல வேக வேகமாய் பஜ்ஜியையும் உளுந்து வடைகளையும் பொரித்து எடுத்துக்கொண்டிருப்பார் மாஸ்டர். மணம், மனத்தை அள்ளும்.

இந்தச் சோதனையை தினமும் கடந்து செல்வோம். இந்த ஏக்கத்துக்காகவாவது கொஞ்சம் எடை குறைந்திருக்க வேண்டும். ஆனால், அதற்குக் கொழுப்பு அதிகம். அப்படியே இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கணவர் “இவ்ளோ வாசமா பஜ்ஜி சுடுற வாசம் வருதே, ஒரு தடவையாவது வாங்குறியா?” எனக் கேட்டார்.

“எதுக்கு, பஜ்ஜியே பஜ்ஜி சாப்பிடுதுன்னு யாராச்சும் சொல்றதுக்கா?” என்றதும், எப்போது வேலைக்குப் போய் மனம் போலத் தின்னலாம் என மனக் கணக்கு போட்டுக்கொண்டார்.

சம்மதம் இல்லாமல் சேரும் எடை

தினசரி கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்போது சொல்லிக்கொள்வது எப்படியாவது உடல் எடையைக் குறைக்கவேண்டும் என. குறைவான அளவு உணவு எடுத்துக்கொண்டாலும் எப்படி அதிகரிக்கிறது இந்த எடை என்கிற சந்தேகம் எனக்குப் பல காலமாய் உண்டு. நம் கண்ணெதிரே வகை தொகை இல்லாமல் தின்று தீர்ப்பவர்கள் ஒல்லியான உடல் வாகுடன் இருப்பதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நொந்து போகும். இத்தனைக்கும் வல்லு வதக்கு எனத் தின்னவெல்லாம் ஆசை இல்லை. அளவாக அதே நேரம் பிடித்த எதையும் ஒதுக்காமல் சாப்பிட நினைப்பது தவறா என்ன? ஆனால், தைத்த உடைகள் போதாமல், பிரித்துவிடத் தையல் இல்லாமல் போகும்போது உணவின் மீதே வெறுப்பு வந்துவிடுகிறது. எல்லாம் கண நேரம்தான். அதன் பின் வழக்கம் போல எவ்வளவு சோகமாய் இருந்தாலும் பிடித்த உணவு தட்டில் இருந்தால் சோகத்தைக்கூடத் தள்ளி வைத்துவிட்டு உள்ளே தள்ள ஆரம்பித்து விடுகிறேன்.

தாத்தா, அப்பா, அம்மா உடல்வாகு நமக்கும் வந்து சேர்கிறது. நம் கையில் இல்லை எனச் சமாதானப்படுத்துபவர்கள் இருந்தாலும், அதெப்படி என் சம்மதம் இல்லாமல் அது இஷ்டத்துக்கு இருக்கலாம் எனக் கடுப்பு வெடிக்கிறது. சொத்து, சுகம் வருவதை வரவேற்கலாம், இந்த வேண்டாததை என்ன செய்வது? அதென்ன நல்லது மட்டும் வேணும், இதெல்லாம் வேணாமா என்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் கணக்குப்போட்டு சமமாய் எடுத்து அனுபவித்து உய்யுங்கள், எனக்கெதற்கு அதெல்லாம்?

ஏன் பாராட்டுவதில்லை?

மனத்தை லேசாக்க, “என்ன மெலிஞ்சிட்ட?” எனக் கேட்டாலே போதுமானதாய் இருக்கிறது. எடை பார்க்கும் இயந்திரத்தில் ஒரு கிலோ இரண்டு கிலோ வரை குறைத்துத் தெரிந்தாலும், ஒரு ஜீவன்கூட அது பற்றிப் பாராட்டாமல் இருக்கும்போது வரும் எரிச்சலில் வழக்கத்தைவிடக் கூடுதலான பரோட்டா இரவு உணவாக உள்ளே செல்லும்.

ஏன் இந்த மக்களுக்குப் பிறரை மனதாரப் பாராட்டும் உணர்வு சுளுவில் வருவதில்லை? அப்படி என்ன வேலையில் மூழ்கிப்போய் இருக்கிறார்கள் அல்லது பிரச்சினையில் தத்தளிக்கிறார்கள்? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்களைக் கவனிக்க வேண்டாமா? அடையாளம் மட்டும், ‘குண்டாக இருப்பாளே, தடியாக இருப்பானே’ என்றெல்லாம் சொல்லத் தெரிந்த வாய்களுக்கு எடை சற்றுக் குறைந்ததாகச் சொல்லும் நல்ல மனம் வரும் நாளில் கரோனோ உலகை விட்டே ஒழிந்திருக்கும்.

எடை குறைப்புப் படலம்

பாலபாடம் போல முதலில் எடையைக் குறைக்க வேண்டும் என்றால் இளம் சூடான நீரில் எலுமிச்சைச்சாறும் தேனும் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்கிற அறிவுரை ஐந்தாவது படிக்கும் குழந்தைகூடச் சொல்லும். அடுத்து கறிவேப்பிலையை அரைத்துக் குடித்தல், பாலில் வெள்ளைப் பூண்டை வேகவைத்துப் பருகுதல், கொள்ளு ரசத்தை சேர்த்துக்கொள்ளல் என வண்டி வண்டியாக ஆலோசனைகள் இறங்கும். நாமும் பார்த்துப் பார்த்து அதன் பிரகாரம் மிகச் சரியாக செய்து முடித்துவிட்டு எடையை சரி பார்த்தால் பெரிய மாற்றம் இருப்பதில்லை. வீட்டில் உள்ள தேன், பூண்டு, கொள்ளு இவைதான் குறைந்திருக்கும். வியர்க்க விறுவிறுக்க நடந்தும் பார்த்தாகிவிட்டது. எடை குறைய ஆரம்பித்தது போல உணர்வு உந்த எடையைப் பார்த்தால் முன்பைவிட ஒன்று கூடக் காட்டும் கொடுமையை எங்கே சொல்வது?

சிலநேரம் துணி வாங்கி அதை தொளதொள வென தைத்து உடுத்திக்கொண்டால், யார் சொல்லாவிட்டாலும் எனக்கே ஏதோ எடை சற்றுக் குறைந்தது போலத் தோன்றும். காபி, டீயில் பால், சர்க்கரை சேர்ப்பதால்தான் உப்பி இருக்கிறோம் என மனத்தைக் இரும்பாக்கிவிட்டு காபிப் பொடி, சர்க்கரை அத்தனையையும் அப்புறப்படுத்திவிட்டேன். ஒரு கட்டத்தில் இருக்கிற எடை கூடாமல் இருந்தாலே போதும் என்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது. பேலியோ மாதிரியான உணவு முறையைப் பின்பற்ற வீட்டுச் சூழல் இடம் கொடுக்கவில்லை. ஆனால், மாயாஜாலம் நிகழ்ந்தது போல அப்போ, இப்போ எனப் பதிவிடுகிற புகைப் படங்கள் காதில் புகையை வரவைக்கும்.

‘கரோனா தேவி’ உபயம்

கரோனோ வந்தாலும் வந்தது. உடல் இதற்கு முன் சந்தித்திராத வலியில் துவண்டது. முறையான தூக்கம் இல்லை. வாய்க்கு உணவே பிடிக்கவில்லை. ஐந்து நிமிடம் சேர்ந்தாற்போல உட்காரக்கூட முடியவில்லை. சுழற்றி அடித்த வலியில் இல்லாமல் போகிறவர்கள் பட்டியலில் நானும் வந்துவிடுவேனோ என்கிற எண்ணம் சதா ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து எதேச்சையாய் கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் வேறு யாரோ மாதிரி தெரிந்தது. கன்னம் வற்றிப் பரிதாபமாய் தெரிந்த முகத்துடன் எடையைப் பார்த்தால் எட்டு கிலோ வரை குறைத்துக் காட்டியது. அடடா... கரோனா தேவி என இதற்கு மிகச் சரியான பெயரை இட்டு வழிபட்ட மாவட்டத்தின் திசையை நோக்கி மானசீகமாய் வணங்கினேன். இதற்குத்தானே ஆசைப்பட்டேன் என நினைத்தாலும், வெளியில் நிற்கிற வண்டியைத் தனியாய் எடுத்து ஓட்டிச் செல்லும் அளவுக்குத் தெம்பு துளியும் இல்லை. நாளுக்கு இரண்டு முட்டை, பால் என எடுத்துக்கொள்ள ஆரம்பித்தவுடன் ஓரளவு பழைய உடல் வந்தது போல இருந்தது. ஆனால் எடை? முன்பு இருந்ததைவிடக் கூடிவிட்டது.

நீங்கள் பருமனானவர் என நினைக்கிறவர்களைச் சந்திக்க நேர்ந்தால், எப்போ கல்யாணம், இன்னும் குழந்தை பிறக்கவில்லையா, இப்போ எங்கே வேலை, என்ன வருமானம் என்பது போன்ற கேள்விகளைத் தவிர்த்துவிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லுங்கள். மெலிஞ்சிட்ட போல? காசா பணமா ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போங்கள். இந்த வார்த்தை எத்தகைய குதூகலத்தைத் தரும் என்பதை உடல் எடை அதிகமாய் இருப்பவர்கள் அறிவர். அந்த மகிழ்ச்சியான தருணத்தை உருவாக்கித் தந்த உங்களுக்கு நிச்சயமாய் அந்த நாள் நல்ல நாளாய் அமையும். (குறிப்பு: அவர்கள் பாதி ஆளாகக் கரைந்திருந்தால் தயவுசெய்து நலம் விசாரித்தலோடு நிறுத்துதல் நல்லது).

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு: nraniji@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x