Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM
இயேசுவுக்கு நிறைய சீடர்கள் இருந்தார்கள். ஆனால் நல்ல நண்பர்கள் இருந்தார்களா?
இயேசுவை மிகவும் அன்பு செய்த அவரின் மூன்று நண்பர்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. அந்த மூவரும் ஒரே குடும்பத்தினர். சகோதரனின் பெயர் லாசர். மார்த்தா, மரியா என்று இரண்டு சகோதரிகள். எருசலேமிலிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்த பெத்தானியா என்னும் ஊரில் அவர்கள் வசித்துவந்தனர்.
இயேசு அவர்களின் வீட்டிற்கு ஒருமுறை சென்றபோது லாசர் இல்லை. மார்த்தா அவரை வரவேற்றார். அன்புக்குரிய இயேசு வீட்டுக்கு வரும்போது நல்ல விருந்து தர வேண்டாமா? எனவே மார்த்தா, அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார்.
மார்த்தாவின் இளைய சகோதரி மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். தான் மட்டும் பரபரப்பாகப் பல வேலைகள் செய்ய, தனக்கு எவ்விதத்திலும் உதவாமல் தன் தங்கை மரியா போய் இயேசுவின் அருகே அமர்ந்து அவரோடு உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்கப் பொறுக்காமல் மார்த்தா இயேசுவிடம் போய், “நான் இத்தனை வேலைகள் செய்யும்போது, என் சகோதரி எனக்கு எவ்விதத்திலும் உதவாமல், என்னைத் தனியாய் விட்டு விட்டாளே! அது பற்றி உமக்குக் கவலை இல்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளிடம் சொல்லும்” என்றார்.
தன் மனக்குறையை சகோதரியிடம் நேரடியாகச் சொல்லி, அவரைத் தனக்கு உதவ அழைக்கா மல், மார்த்தா இயேசுவிடம் போய் முறையிடுகிறார். இது வழக்கமாய் பல குடும்பங்களில் நிகழ்வதுதானே?
நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்த மரியா
“மார்த்தா, நீ பலவற்றைப் பற்றி கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது.”
தன்னிடம் வந்து முறையிட்ட மார்த்தாவுக்கு இயேசு சொன்ன பதிலில் பல உண்மைகளும் பாடங்களும் உள்ளன.
பலவற்றைப் பற்றி கவலைப்பட்டுக் கலங்குவதும் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு எப்போதும் பரபரப்பாக இயங்குவதும் சிலரின் இயல்பு. ஓய்வு வேண்டும், அமைதி வேண்டும் என்ற ஏக்கம் மனதில் இருந்தாலும் அவற்றை அவர்கள் தேடப் போவதில்லை. சிலருக்கு இப்படி பரபரப்பாகச் செயல்பட போதுமான வேலைகள் இல்லை என்பதே ஏமாற்றமாக இருக்கும். ஓய்வான, அமைதியான பொழுதுகளைத் தேடி அனுபவிக்கும் நபர்களைப் பார்த்து ஏமாற்றமும் கோபமும் இவர்களுக்கு வரலாம். ஆனால் அதற்குக் காரணம் வேறு யாருமல்ல, தங்களது இயல்பே என்று அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
“தேவையானது ஒன்றே” என்கிறார் இயேசு. காலம், நேரம், சூழலுக்கு ஏற்றாற்போல இந்தத் தேவை மாறலாம். அத்தருணத்தில் அவர்களின் வீட்டைத் தேடி வந்த இயேசுவின் முக்கியத் தேவை அன்று என்னவாக இருந்திருக்கும்?
எருசலேமுக்குச் செல்லும் வழியில் இயேசு அங்கே வந்தார். இந்தச் சந்திப்பு முடிந்ததும் அவர் பயணத்தைத் தொடர வேண்டும். அங்கே அவர் மீது பொறாமையும் பகையும் கொண்ட அரசியல் பலம் மிக்க சிலர் அவரைக் கைது செய்து, கொல்லத் திட்டமிட்டு இருப்பதை அவர் அறிந்திருந்தார்.
நடக்கவிருக்கும் சம்பவங்கள் மனத்தில் உருவாக்கும் உணர்வுகளை புரிந்துகொண்டு அன்பு செய்யும் நெருங்கிய நண்பர்களோடு பகிர்ந்துகொள்வதே, அன்று இயேசுவின் முக்கியத் தேவையாக இருந்திருக்கக்கூடும். அவர்களைச் சந்திப்பது இதுவே கடைசி முறை என்ற சோகமும் அவர் மனத்தில் இருந்திருக்கலாம். இத்தகைய தருணத்தில் நல்ல உணவைவிட நல்ல நண்பர்களே தனக்குத் தேவை என்று இயேசு நினைத்திருக்கலாம். அவரது உடலுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் கருத்தாக இருந்த மார்த்தாவைவிட அவரது மனத்தின் தேவையை உணர்ந்து, அவரது பாதத்தருகே அமர்ந்து, அவர் பகிர நினைத்ததை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்ததால்தான், “மரியா நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டார்” என்று இயேசு சொன்னாரோ?
உணவு ஒன்றையே நினைத்து, உறவையும் உள்ளத்துத் தேவைகளையும் மறந்து விடும் நாம், இறைவனும் சரி, நமக்கு நெருங்கியவரும் சரி அவர்கள் நம்மிடம் சொல்ல நினைப்பதைக் கேட்டு உணரும் தருணங்கள் நமக்கு வேண்டும்.
“உன் பாதம் அமர்ந்து
உன் முகம் பார்த்து
உன் மொழி கேட்டால் போதும்”
என்று நாமிருக்கிற அன்பு கமழும் அரிய தருணங்களை நாமே தேடிப் பெற வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT