Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

‘போலித் தகவல்’ தொற்றிலிருந்து விலகியிருப்போம் :

கரோனா இரண்டாம் அலை இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த நிலையில் போலிச் செய்திகள், ஆதாரமற்ற சமூகஊடகத் தகவல்கள், அறிவியல்பூர்வமற்ற கருத்துகளும் பேரலைபோல் எழுந்து மக்களைக் குழப்பி வருகின்றன.

ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடையும் குழப்பமான, ஆதாரமற்ற செய்திகளால் ஒருவர் தடுமாறிப்போவது இயல்பே. ஆனால், நாவல் கரோனா வைரஸ் என்பது கடந்த நூறாண்டு காலத்தில் மிக மோசமான வைரஸ் தொற்று என்பதை மறந்துவிடக் கூடாது.

இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரே வழி வீட்டைவிட்டு வெளியேறாமல் இருப்பதுதான். மீறிப் போக வேண்டுமென்றால் இரட்டை முகக்கவசம், சானிடைசர்-சோப்பு கொண்டு கையை அடிக்கடி கழுவுதல், கூட்டமான இடங்களைத் தவிர்ப்பது – எங்கு சென்றாலும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை எக்காரணம் கொண்டும் விடாமல் செய்துவர வேண்டும். அத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்வது வைரஸ் தொற்றைத் தடுக்கும், மீறி நோய் வந்தால் மோசமாக உடலை பாதிக்காது.

கோவிட் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாக இருந்துவிட்டு, உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் பயத்தில் ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்‘ என்பதுபோல் ஆதாரப்பூர்வமற்ற தகவல்களை சிரமேற்கொண்டு செய்வது எந்தப் பலனையும் அளிக்காது. இன்றைய சூழ்நிலையில் இந்த மோசமான வைரஸ் தீவிரமாகப் பரவிக்கொண்டுள்ளது.

அதிலிருந்து நாம் ஒவ்வொருவரும், நம் குடும்பத்தினரும், நம் சமூகமும் தப்பிக்க வேண்டுமென்றால் உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் முறைப்படி செயல்பட வேண்டியது ஒன்றே தீர்வு, வழி. தமிழக அரசும் அதை கவனத்தில் கொண்டே அறிவுரைகளை வழங்கிவருகிறது. எனவே, அக்கறையான மருத்துவர்களும் அறிவியல் அறிஞர்களும் கூறும் கருத்துகளைக் கேட்டு, அவற்றின்படி நடப்போம்.

- நேயா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x