Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM
‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்றார் தாயுமானவர். தனக்கு அருளப்பட்ட மந்திரத்தை எல்லாரும் கேட்டு உய்வுற வேண்டும் என்று கோயில் கோபுரத்தின் மீதேறி உரத்துச் சொன்னவர் ராமானுஜர். தனிப்பட்ட ஞானிகள் மட்டுமே சத்திய எழுச்சி பெற்றால் போதாது; முழு இனமும், முழு நாடும், முழு உலகமுமே ஞானபூமியாக வேண்டும் என்று ‘போர்ப்பறை’ நூலில் முழங்கியவர் ஈழத்தின் முதன்மைச் சிந்தனையாளர்களில் ஒருவரான மு.தளையசிங்கம்.
39 ஆண்டுகளே வாழ்ந்த மு.தளையசிங்கம், ஈழத்துச் சிந்தனையாளர் மு. பொன்னம்பலத்தின் அண்ணன். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்ததற்கான சாயல்களை இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய மிகப்பெரும் ஆளுமை வேறு யாருமில்லை என்கிறார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. தாழ்ந்து போனமைக்குத் துக்கித்து மேலான ஒன்றை எழுப்ப முயன்றார் பாரதி. தாழ்ந்துபோனதை புதுமைப்பித்தன் வெட்ட வெளிச்சமாக்கினார். பாரதியின் சிந்தனையைத் தன் காலத்துக்கு கொண்டுவந்து இடைக்கால சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப்படுத்தியவர் என்று மு.தளையசிங்கத்தைக் கொண்டாடுகிறார் சுந்தர ராமசாமி.
அவரது ‘வெள்ளை யானை’ சிறுகதையில் வெளிப்படும் வேதாந்தச் சாயல் தமிழில் இதுவரை யாராலும் கையாளப்படாதது. வக்கும்பர, நல்லசிவம் என்கிற இரண்டு நண்பர்கள் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடையே நடைபெறும் உரையாடல்தான் கதையின் மைய இழை. அவர்கள் குளித்துக்கொண்டிருந்த இடத்துக்கு சற்று தள்ளியிருந்த மணல்வெளியின் முடிவில் ஆற்றின் ஆழமான அடிப்பகுதி யில் இருந்து ஓர் கறுத்த யானை பிளிறிக்கொண்டு எழுந்தது. அங்குமிங்கும் தலையை ஆட்டிய வண்ணம் நீரைவிட்டு வெளியே வர முயன்றது. ஒருவேளை அதற்கு மதம் பிடித்துவிட்டதோ?
அந்த வேளையில் பாகன் அங்குசத்தோடு ஓடி வந்ததைக் கண்டு யானை நீருக்குள் அடங்கிவிட்டது. பார்த்துக்கொண்டிருந்த நல்லசிவத்தின் நெஞ்சுக்குள்ளும் ஏதோ ஒன்று கெம்பி எழுந்து அடங்கிக்கொண்டிருந்தது.
சற்றுத் தொலைவில் மற்றொரு யானை குளித்துக்கொண்டு நிற்கிறது. அதன்மீது சூரிய வெளிச்சம் விழுந்து நீரில் நனைந்த அதன் உடல் வெள்ளையானை போல் மினுங்கித் தெரிகிறது. வெள்ளை யானையைப் பார்க்கும்போதெல்லாம் உடல் புல்லரிக்கிறது.
நாங்கள் செய்யப் போகிறோம். நிச்சயமாக செய்யப் போகிறோம் என்று வெள்ளை யானையை பார்த்தவாறு ஏதோ ஒரு புது சக்தியால் ஆட்கொள்ளப்பட்டவனைப் போல் நல்லசிவம் கத்துகிறான்.
நல்லசிவத்தின் கண்கள் கக்கிய ஒளியையும் குரல் எழுப்பிய நம்பிக்கைத் தொனியையும் அவன் நண்பன் வக்கும்பர இதுவரை பார்த்ததே இல்லை என்ற வரிகளோடு கதை முடியும்.
சத்தியக் காட்சி
இந்தக் கதை என்ன சொல்லு கிறது? ஆழ் மனதில் புதைந்தி ருக்கும் ஆற்றல் யானைபோல் பிளிறி எழுவதையா? வெள்ளை யானைபோல சத்தியக்காட்சி தோன்றிப் பரவசப்படுத்தும் என்பதையா? வாசகனின் மனத்தில் அவனது பக்குவநிலையை பொறுத்து, கதை பல்வேறு பிம்பங்களை எழுப்புகிறது.
அவரது ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘சாமியாரும் பணக்காரரும்’, ‘சத்தியச் சந்நிதி’ போன்ற மற்ற கதைகளும் வேதாந்தச் சரட்டால் பின்னப்பட்டிருக்கின்றன.
‘வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்’, ‘போர்ப்பறை’, ‘விசாரம்’, ‘சும்மா இரு’ முதலான கவிதைகளிலும் ‘மெய்யுள்’ போன்ற மெய்யியல் கட்டுரைகளிலும் ‘ஒரு தனிவீடு’ நாவலிலும் அவருக்கு உள்ளே அடங்கிக் கிடந்த ஆன்மிக சக்தி, யானையாய் எழுந்து பிளிறு வதையும், வெள்ளை யானையாய்த் தோன்றி நம்மை முற்றிலும் மாறுபட்ட அகவெளித் தேடலில் ஆட்படுத்துவதையும் உணர முடியும்.
ஆத்மா ஞானமடைந்து என்ன பயன்? என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்.
இது ஞானமற்ற கேள்வி. பயனைப் பற்றி கவலைப்படும் அறியாமை யையும் பற்றையும் அழிப்பதுதான் ஞானம்.
பயன் என்றால்?
‘அறியாமை யினால்தான் நாம் வெளிப்பொருள் களில் பயனைத் தேடுகிறோம். அந்த அறியாமையை உடைப்பதுதான் ஞானம்.’
பயனை உணர்ந்து செய்வதாக நீ நினைத்துச் செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார். தேவையான பொருள்கள் என்று நீ நினைத்துத் தேடும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார். எல்லாம் சிரிப்பையூட்டும். எப்பவும் நீ தேவைகளை உடைய பிச்சைக்காரன்தான்.
பிச்சைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறாய்
உண்மையான தெருப் பிச்சைக்காரனுக்குக்கூட அந்த அளவுக்குப் பற்றும் இல்லை. தேவையும் இல்லை. பணத்தோடும் பதவியோடும் உயர உயரத்தான் நீ அதிகமாகப் பிச்சைக்காரனாக மாறிக்கொண்டிருக்கிறாய்.
நம்பிக்கையோடு நீ தேடத் தொடங்க வேண்டும். தேடிக் கண்டபின் வேதங்களும் உனக்குத் தேவை யற்றவையே. ஞானி வேதங்களையும் தூக்கி எறிந்துவிடுவான்.
சங்கரர் சொன்னதுபோல் முதலில் நம்பிக்கை வை. பின்பு தேடத் தொடங்கு. அனுபவித்த பின்பே ஏற்றுக்கொள். தேடத் தொடங்காதவரைக்கும் உன்னால் தீர்ப்பளிக்க முடியாது. தீர்ப்பளிக்க உனக்குத் தகுதியில்லை.
எழுத்து என்னுள் வளர்த்த துறவு. பிறகு எழுத்தையே துறக்குமளவு வளர்ந்துவிட்டது என்று தளையசிங்கமே குறிப்பிடும் அளவுக்கு அவரது அகத் தேடல் தீவிரமாயிற்று.
தனி மனிதன், இனம், தேசம், வட்டாரம், கிராமம், நாடு, உலகம், வியாபாரம், கல்வி, அறிவியல், கலை, தத்துவம், மொழி ஆகிய எல்லாவற்றின் எழுச்சியையும் வளர்ச்சியையும் அவர் கனவு கண்டார். இதற்கு சர்வோதயம் என்று பெயரிட்டார்.
தளையசிங்கத்தின் அகத்தேடலில் அவருக்கு தீட்சை கொடுத்தவர் நந்த கோபாலகிரி ஆவார். தீட்சை கொடுக்கப்பட்ட தினம் அரவிந்தர் தினமாகவும் (1966-ஆகஸ்ட்-15) இந்தியா விடுதலைபெற்ற தினமாகவும் ஆனது தற்செயல்.
மு. தளையசிங்கம் எழுத்தோடு நின்றுவிடவில்லை. எழுத்தைத் துறந்து செயலில் இறங்கினார். 1971-ல் தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதன் இறுதிக்கட்டமாக, இவர் நன்னீர்க் கிணறுகளுக்கு அருகில் உள்ள காளி கோயிலில் உண்ணாவிரதம் இருந்தார். போலீசாரால் தாக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதற்குப் பின்னர் ஒன்றே முக்கால் ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். 1975 ஏப்ரல் 2-ம் நாள் காலமானார்.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT