Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM
l இந்து தமிழ் இயர்புக் 2021
பொதுவாக ‘இயர் புக்’ என்பது பக்கங்களை புரட்டுவதுபோல் மட்டுமே இருக்கும்; ‘தமிழ் இந்து இயர்புக்’கின் பக்கங்களைப் புரட்டு கையில், வரலாற்றோடு வாழ்க்கையையும் சேர்த்தே பார்க்க முடிகிறது. சாமனியன் முதல் சமூகத்தின் அத்தனை மூலைகளில் இருந்து நகர்வோரும், நகர்த்துவோருக்குமான நூலாக அமைந்திருக்கிறது இந்த இயர்புக். உலகை உலுக்கிய கரோனாவைப் பற்றிய விரிவான பதிவாக இருந்தாலும் சரி, உலகளாவிய செய்திகளாக இருந்தாலும் சரி, நேர்த்தியாக நெசவுசெய்து உடுத்துவதற்கு ஏற்பப் பதமாகக் கொடுத்திருக்கிறது ‘இந்து தமிழ்’ ஆசிரியர் குழு. அவசியம் படிக்க வேண்டியது மட்டுமல்ல, இது ஆவணப்படுத்தி வேண்டிய நூலும்கூட.“நாட்டுக்குள்ளிருந்த மக்கள் காட்டுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்ததால், காட்டுக்குள் இருந்த நுண்ணுயிரிகள் இப்போது நாட்டுக்குள் நுழைகின்றன” என சிந்திக்க வைக்கும் வரிகள் மெச்சுதலுக்குரியவை. உலகப் பெருந்தொற்றுக்கள் குறித்த வரலாற்று ஆவணத்தில் தொடங்கி, கரோனாவின் வேற்றுருக்கள் குறித்த விவரங்கள், இந்தியத் தடுப்பூசி முனைப்பு, தடுப்பூசிகளில் இம்முறை பயன்படுத்தப்படும் mRNA தொழில்நுட்பம், ‘ஹாப்பி ஹைப்பாக்சியா’ முதல் ‘பிராடிகைனின் ஸ்டார்ம்’ வரையிலான பல நுட்பமான அறிவியல் செய்திகள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்துக்குரியது. அதேவேளை, தமிழகத்திலும் பெரும் பேசுபொருளாகவும், முதல்நிலை நோயர்களிடம் பெரும் நம்பிக்கையையும் பயனையும் கூடவே பல ஆய்வுகளையும் முடுக்கி விட்டிருந்த கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ மருந்துகள் குறித்த செய்திகள் இடம்பெற்றிருக்கவில்லை. அவற்றையும் சேர்த்திருந்தால் கரோனா தொற்று குறித்த பகுதி முழுமை அடைந்திருக்கும் என்று தோன்றியது.
- மருத்துவர் கு. சிவராமன், பிரபல சித்த மருத்துவர்மருத்துவ எழுத்தாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT