Published : 11 Dec 2020 07:29 AM
Last Updated : 11 Dec 2020 07:29 AM
தமிழகத்தை புரெவிப் புயல் கடந்துகொண்டிருந்த நேரத்தில், ‘கொடுத்த வாக்கைத் திரும்பப்பெறும் வழக்கம் எனக்கு இல்லை’ என்று கூறி, தமிழக அரசியல் களத்தில் புயலாக நுழைந்திருக்கிறார் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த். அவருக்கு இன்று 70-வது பிறந்த நாள். அரசியலில் அவரை எதிர்பார்க்கத் தூண்டியதில் அவருடைய 45 ஆண்டுகாலத் திரைப் பயணத்துக்கு அதிக பங்குண்டு. அதேபோல், திரைக்கு வெளியே அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம், அவரைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தந்துவரும் ஆதரவு போன்றவையும் ரஜினியின் அரசியலுக்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன.
அவ்வகையில் ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் வெளியாகி, கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதை, ‘ரஜினியிசம் 45 ஆண்டுகள்’ என்கிற தலைப்பில் அவருடைய ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள். 'இந்து தமிழ் திசை' நாளிதழ், ரஜினியின் பன்முகத் திரைப் பயணத்தை அலசி ஆராய்ந்து, சுவாரஸ்யமான ஆவணப் பெட்டகம்போல், ‘சூப்பர் 45’ என்ற தலைப்பில் பிரம்மாண்ட சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. தற்போது கடைகளில் பரபரப்பாக விற்றுவரும் ‘சூப்பர் 45’ மலரின் சிறப்புகள் என்ன? இதோ 'இந்து டாக்கீஸ்' வாசகர்களுக்காக ஒரு சிறப்புப் பார்வை.
மூன்று பிரிவுகள்
260 பக்கங்கள் கொண்ட ‘சூப்பர் 45’ மலரின் விலை 275 ரூபாய். இன்றும் நாளையும் முன்பதிவுசெய்யும் அனைவரும், 20 சதவீதத் தள்ளுபடி விலையில் ரூபாய் 220/-க்கு மலரை வீட்டுக்கே வரவழைக்கலாம். 'சூப்பர் 45' மலரில் திரைப் பயணம், வாழ்க்கைப் பயணம், ரசிகர் வெளி ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. திரைப் பயணம் என்ற தொடக்கப் பிரிவில் ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘தர்பார்’ வரையிலான ரஜினியின் பன்முகத் திரை ஆளுமையை வெளிப்படுத்தும் கட்டுரைகள், பேட்டிகள், இதுவரை வெளிவராத தகவல்களின் தொகுப்பு, அபூர்வப் புகைப்படங்கள், ரஜினியின் திரை அவதார ஓவியங்கள் என பக்கம்தோறும் வியப்பு காத்திருப்பதை, மலரைப் பிரித்துப் படிக்கும்போது உணரமுடியும்.
தொடக்கக் கால ரஜினி பற்றிய பல ஆச்சர்யமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ரஜினி, அரசுத் திரைப்படக் கல்லூரியில்தான் நடிப்புப் பயிற்சி பெற்றார் என்று இதுவரைக் கூறப்பட்டு வந்ததற்கு மாறாக, ரஜினி படித்தது ‘தென்னிந்திய பிலிம் சேம்பர்’ நடத்திய நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் என்ற திருத்தமான தகவல் தொடங்கி, அங்கே ரஜினிக்கு நடிப்பு சொல்லித் தந்த ஆசிரியர்கள் யார், அவர் எப்படிப்பட்ட மாணவராக இருந்தார், கே.பாலசந்தரை முதன்முதலில் ரஜினி எப்போது சந்தித்தார். அந்தச் சந்திப்பில் நடந்தது என்ன, ரஜினியின் தொடக்கக் காலச் சென்னைத் தருணங்கள் என ஆதாரபூர்வமான, வெளிவராத தகவல்களைத் தந்து, மலருக்குள் வாசகர்களை அழைத்துச் செல்கிறது ‘ரஜினி மினி’ தகவல் தொகுப்பு.
சக பயணிகளின் வாக்கு மூலம்
'சூப்பர் ஸ்டார்' எனும் அந்தஸ்து ரஜினிக்கு எடுத்ததுமே கிடைத்துவிட வில்லை. வில்லனாகவும் எதிர் நாயகனாகவும் அவர் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய காலத்தில், அவரோடு பயணித்த நடிகர்கள், நடிகைகள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சக பயணிகளின் நேரடி சாட்சியம் மட்டுமே நமக்குத் தெளிவான சித்திரத்தைத் தரமுடியும். ரஜினியின் தொடக்க ஆண்டுகள் பற்றிய சுவாரஸ்ய நிகழ்வுகள், அப்போதைய ரஜினியின் திரையுலக வளர்ச்சி, அவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள், அவற்றை ரஜினி எதிர்கொண்ட விதம், தாங்கமுடியாத புகழால் ரஜினி தத்தளித்த உணர்வுநிலை எனப் பலவற்றையும் பதிவுசெய்திருக்கின்றன மலரின் முதல் 50 பக்கங்கள். அவற்றில், நடிகர் சிவகுமார் எழுதியிருக்கும் ரஜினி பற்றிய மனந்திறந்தக் கட்டுரை, ரஜினியை நாயகனாகக் கொண்டு 25 படங்களில் அவரை இயக்கிய எஸ்.பி.முத்துராமனின் விரிவான பேட்டியில் பொதிந்திருக்கும் பிரத்யேகத் தகவல்கள் ஏராளம்!
ரஜினியைத் திரைக்கு அறிமுகம் செய்த ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் மகளும் 'கவிதாலயா' நிறுவனத்தின் தலைவருமான புஷ்பா கந்தசாமியின் பேட்டியில் உள்ள புள்ளிவிவரங்கள் வியப்பூட்டும்! இந்த இரு பேட்டிகளும் 80-களின் தமிழ் சினிமா காலகட்டத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். ‘மூன்று முடிச்சு’ தொடங்கி ’முரட்டுக் காளை’ வரையிலான ரஜினியின் வளர்ச்சியைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ள இந்தத் தொடக்கப் பக்கங்களில், ‘ரஜினி - கமல்’ இருவருடைய நட்புலகம் குறித்து ஊடுருவிப்பார்க்கும் ராசி. அழகப்பனின் கட்டுரை, நண்பர்கள் இருவரும் ஏன் இணைந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுத்தார்கள் என்பதையும் தெளிவாகப் பதிவுசெய்திருக்கிறது.
நட்சத்திர எழுத்தாளர்களின் அணிவகுப்பு
ரஜினியின் நடிப்பாளுமையில் தனித்துவமான அம்சம் அவருடைய எதிர் நடிப்புத் திறன். தென்னிந்திய சினிமாவில், கதாநாயக நடிப்பின் ஒரு பகுதியாகவே எதிர் நடிப்பை ஏற்கச் செய்துவிட்ட ரஜினியின் நடிப்பாளுமையை, ‘எதிர் நடிப்பின் இலக்கணம்’ என்ற கட்டுரை வழியாகச் சுவாரஸ்யமான பார்வையுடன் முன்வைத்துள்ளார் ஆர்.அபிலாஷ் சந்திரன்.
ரஜினியின் திரைப் பயணத்தை வண்ணமயமாக்கியவர்கள், அவருடைய கதாநாயகிகள். ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி, ‘அண்ணாத்த’ வரையிலான ரஜினியின் கதாநாயகிகள் பற்றிய அட்டகாசமான அலசல் கட்டுரையை வரைந்திருக்கிறார் ஜெ.ராம்கி. அவரது கட்டுரைக்கு வலிமை சேர்க்கும் விதமாக சுஹாசினி, ராதிகா, மேனகா, மாதவி, ராதா, அம்பிகா, ரூபினி, கௌதமி, மீனா, ரோஜா, குஷ்பூ தொடங்கி ஈஸ்வரி ராவ், மாளவிகா மோகனன் வரை படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியுடனான தங்களது அனுபவங்களை மனம் விட்டுப் பகிர்ந்திருக்கும் பக்கங்களைவிட்டு உங்கள் கண்களும் கருத்தும் அகலாது.
கதாநாயக சினிமாவின் மாபெரும் பிம்பமாக அடையாளப்படுத்தப்படுபவர் ரஜினி. அதேநேரம், தனது நாயக பிம்பக் கதாபாத்திரத்துக்கு வலிமை கூட்ட, சக கதாபாத்திரங்களுக்கும் கலையம்சங்களுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மிகச் சிறந்த புரிதலைக் கொண்டவர். அந்த வகையில் கதாசிரியர்களையும் எழுத்தாளர்களையும் ரஜினி எவ்வாறு மதிக்கக்கூடியவர் என்கிற அனுபவத்தைப் பகிர்ந்திருக்கும் எழுத்தாளர்கள் சுபாவின் கட்டுரை, எம்.ஜி.ஆரைப் போலவே கதை சார்ந்த புரிதலிலும் திரைக்கதை அமைக்கும் திறமையிலும் ரஜினி எவ்வாறு சிறந்து விளங்கக் கூடியவராக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் கட்டுரை, ரஜினி எவ்வாறு ஒரு சிறந்த சினிமா உழைப்பாளியாக இருக்கிறார் என்பதை உணர்வுபூர்வமாக பகிர்ந்துள்ள ‘பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் கட்டுரை, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தை ரஜினி எளிதில் அடைந்துவிட வில்லை என்பதை சுவைபட விவரிக்கும் கே.கே.மகேஷின் கட்டுரை ஆகியன மலரின் அடுத்துவரும் ஐம்பது பக்கங்களை அலங்கரித்துள்ளன.
பன்முகப் பயணத்தின் பளீர் பதிவுகள்
ரஜினியின் பன்முகத் திரைப் பயணம் என்பது பாலிவுட்டில் அழுந்தத் தடம்பதித்த அவரது அபாரமான சாதனையை உள்ளடக்கியது. ‘தென்னிந்தியாவிலிருந்து ஒரு புயல்’ என்ற வெ.சந்திரமோகனின் கட்டுரை, ‘டான்’ வேடங்களின் டானாக விளங்கும் ரஜினியின் பாலிவுட் தொடர்பை ஒவ்வொரு அங்குலமாக அலசியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ‘பாட்ஷா’ எனும் மிகப்பெரிய வெற்றிப் படம் உருவாக, சிறு தீப்பொறியாக இருந்த ‘ஹம்’ இந்திப் படத்தின் தாக்கம் தொடங்கி, ரஜினி ‘மாணிக் பாட்ஷா’ கதாபாத்திரத்துக்கு தன்னை எவ்வாறு தயாரித்துக்கொண்டார், ‘அண்ணாமலை’ படத்தில் முதன்முதலில் ரஜினிக்காக அனிமேஷன் டைட்டில் கிரெடிட் உருவான பின்னணி, ரஜினிக்கும் அவரது இயக்குநருக்குமான புரிந்துணர்வு இணையும் புள்ளி, ‘பாட்ஷா’வின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டாம் என ரஜினி அடியோடு மறுத்துவிட்டதற்கான காரணம் என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அளித்திருக்கும் பிரத்யேகப் பேட்டி, விறுவிறுப்பு குன்றாத திரை அனுபவம்போன்ற உணர்வைத் தருகிறது. ‘அபூர்வ ராகங்கள்’ தொடங்கி ‘சந்திரமுகி’ வரையிலும் ரஜினியின் மேக்கப் மேனாக பணிபுரிந்த சுந்தரமூர்த்தியின் பேட்டி, ‘பாட்ஷா’ ரஜினியின் தோற்றம் உருவான பின்னணியை வியக்கும் விதமாக நமக்குப் பகிர்ந்திருக்கிறது.
அதேபோல் இந்தியாவுக்கு வெளியே, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ‘டான்சிங் மகாராஜா’வாக ரஜினியைக் கொண்டாட வைத்த ‘முத்து’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் பேட்டி, ரஜினியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ‘பாட்ஷா’, ‘முத்து’ படங்கள் தொடங்கி அவருக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் தருண்குமாரின் பேட்டி, ‘பணக்காரன்’, ‘மன்னன்’, ‘உழைப்பாளி’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ படங்களின் இயக்குநர் பி.வாசுவின் அனுபவப் பகிர்வு, 40 ஆண்டுகளைக் கடந்து இன்றைக்கும் 'பாக்ஸ் ஆபீஸ்' தளபதியாக விளங்கிவரும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் மார்க்கெட் வளர்ச்சியை மதிப்பிட்டிருக்கும் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியத்தின் பேட்டி போன்றவை ரஜினியுடைய 45 ஆண்டு காலத் திரைப் பயணத்தின் உச்சப் புள்ளிகளை எடுத்துக்காட்டும் பளீர் பதிவுகள்.
இதற்குமுன் பதிவுசெய்யப்படாத வாழ்க்கை
ரஜினியின் பால்யம், அவரது பள்ளிப் பருவம், இளைமைக் காலம், பேருந்து நடத்துநராகப் பணிபுரிந்த காலம் உள்ளிட்ட அவரது பெங்களூரு வாழ்க்கை குறித்து, அதிகாரபூர்வமான பேட்டிகள் வழியாக அட்டகாசமாகத் திரட்டித்தந்திருக்கிறார் பத்திரிகையாளர் இரா.வினோத். ரஜினியின் அண்ணன் சத்தியநாராயண ராவ், அவரது மற்ற அண்ணன்கள் உள்ளிட்ட அவரது ரத்த உறவுகள், பால்ய காலம் தொடங்கி இன்றுவரைத் தொடரும் அவரது ஆத்ம நண்பர்கள், பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த காலத்தில் பழகிக் களித்த சக ஊழிய நண்பர்கள் ஆகியோரின் பேட்டிகள் வழியாக பதியப்பட்டிருக்கும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் முழுமையான வாழ்க்கைக் கதை, மலரின் ‘வாழ்க்கைப் பயணம்’ பிரிவுக்கு மணி மகுடம். ரஜினிகாந்தின் மூக்கில் ஏற்பட்டுள்ள தழும்புக்கான காரணத்தையும்கூட எடுத்துக்காட்டும் இந்த கட்டுரை, கால வெள்ளத்தில் கரைந்துபோய்விடாமல் பத்திரப்படுத்தப்பட்ட அபூர்வப் புகைப்படங்களுடன் பதிவுசெய்திருக்கிறது. அதேபோல், ரஜினியை வைராக்கியத்துடன் ஜெயிக்க வைத்த அவரது முதல் காதல், எப்போது, எங்கே மையம்கொண்டது என்கிற ரகசியத்தையும், திரைப்படத்தை மிஞ்சும் அந்தக் காதலின் அடுத்தடுத்த கட்டங்களையும் ‘சூப்பர் 45’ மலர் முதல்முறையாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது ஆன்மிகத் தேடல் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் ஒன்று. ரஜினி எனும் ஆன்மிகவாதியின் பின்னுள்ள கதையை ‘ராஜரிஷி ரஜினிகாந்த்’ என்ற கட்டுரை ஆச்சர்யமூட்டும் புகைப்படத் தொகுப்புகளுடன் அறியத் தருகிறது. ரஜினியின் இமயமலைப் பயணத்தை ஒரு சக ஆன்மிகப் பயணியைப் போல அணுகும் இந்தக் கட்டுரையில் கொட்டிக்கிடக்கும் வெளிவராத தகவல்கள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த ரஜினியை, ஒரு சிறந்த கணவராக, அப்பாவாக, மைத்துனராக அறிமுகப்படுத்துகிறது லதா ரஜினிகாந்தின் சகோதரர் ரவி ராகவேந்திராவின் பேட்டி.
ஊர்த்தோறும் ரஜினி
மாநகரங்கள் தொடங்கி சிற்றூர்வரை ரஜினியை தலைவராகவும் தங்களின் கடவுளாகவும் கொண்டாடும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்தான் அவரது ஆன்ம பலம். அவர்களில், ஆக்கபூர்வமாகவும் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் செயல்பட்டுவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பலரை ‘ரசிகர் வெளி’ பிரிவுக் கட்டுரைகள் அறிமுகப்படுத்துகின்றன. அதேசமயம், அவரது ரசிகர்களின் நெடுநாள் எதிர்பார்ப்பான ரஜினியின் அரசியல் நுழைவையும் அது வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தை அலசும் கட்டுரைகளும் மலரில் இடம்பிடித்துள்ளன.
நவீனத் தூரிகையின் ஒளியில்...
இத்தனை சிறப்புகளைக் கொண்ட ‘ரஜினி 45’ மலரை மேலும் சிறப்பாக்கும் விதமாக, ஓவியர் ஏ.பி.தரின் கலைவண்ணத்தில் உருவான ராஜ கம்பீரமான ரஜினி ‘புளோ - அப்’ போஸ்டர் மலரின் பிரத்யேக இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கே காணும் மலரின் அட்டையை வடிவமைத்திருக்கும் யுவராஜ் கணேசனின் ‘ரஜினி 45’ கருத்தாக்க ஓவியம், கோபி ஓவியன் வரைந்த ரஜினி ஓவியங்கள் என நவீனத் தூரிகையின் ஒளியில் ஒளிரும் ரஜினியை மலர் முழுவதும் காண முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT